"வடிவேலுவிடம் அரண்மனையை கொடுத்துவிட்டால்!"- சந்திரமுகி 2 கதை ஆரம்பமானது எப்படி? Pவாசுவின் சிறப்பு பேட்டி இதோ

சந்திரமுகி 2 கதை ஆரம்பமானது எப்படி என Pவாசுவின் சிறப்பு பேட்டி,Director p vasu about chandramukhi 2 movie story | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரை பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த சந்திரமுகி திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெரிய சாதனையை படைத்திருக்கிறது. இப்படி இமாலய வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்குனர் பி வாசு அவர்கள் தற்போது உருவாக்கி இருக்கிறார்.  லைகா ப்ரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவட்  இணைந்து நடித்திருக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இயக்குனர் P.வாசு அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பற்றிய தனது திரைப்பயணம் , சந்திரமுகி மற்றும் சந்திரமுகி 2 குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் கதை ஆரம்பமானது எப்படி என்பது குறித்து பேசும்போது,

“சந்திரமுகி படம் பார்க்கும் போது எப்படி போய் பார்த்தீர்களோ அதே மாதிரியான ஒரு உணர்வோடு வந்தீர்கள் என்றால் இது இன்னொரு சந்திரமுகியாக இருக்கும். அந்த வீடு வந்த உடனே ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடு இல்லையா? ஏலத்தில் பிரபு எடுத்து விட்டார் தன் மனைவிக்கு எப்போதுமே அந்த கற்பனை சக்தி அதிகமாக இருப்பதால் அந்த அரண்மனையை வாங்கி விடலாமே என நினைத்து அவர் அதை வாங்குகிறார். எனவே அந்த வீட்டுக்குள் நடந்த சம்பவங்கள் அந்த படத்தில் (சந்திரமுகி) நடந்திருக்கிறது. அவர் ஒரு காண்ட்ராக்ட்க்காக தான் வந்திருக்கிறார் ஒரு ரோடு காண்ட்ராக்ட் எடுத்திருந்தார் அதை முடித்து விட்டார். ஒரு பிரச்சனை இருந்தது அது அந்த நேரத்தில் நடந்தது, அதன் பிறகு முடிந்து விட்டது. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து அவர் போயிருக்கலாம் அவர் வேலை முடிந்து அவர் வேறு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஒரு கேரளாவிற்கு போகலாம் ஹைதராபாத்துக்கு போகலாம். பொதுவாக அதிகாரிகள் இப்படி வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கு செல்லலாம். அப்படியாக இவர் காண்ட்ராக்ட் வேற ஊரில் கிடைத்து அந்த ஊருக்கு சென்றிடலாம். முதல் பாகத்திலேயே அவர் இடையில் இரண்டு ரீலில் இருக்க மாட்டார் வேலை விஷயமாக அமெரிக்கா சென்று இருப்பார். அது மாதிரி இப்போது அவர் கான்ட்ராக்ட் விஷயமாக வேறு ஊருக்கு சென்று இருக்கலாம். அது மாதிரி அவர் உடன் இருந்த உறவினர்களும் அவர் அவர்களுடைய இடங்களுக்கு சென்று இருக்கலாம் இப்போது அந்த வீடு காலியாக இருக்கிறது. இப்போது அந்த வீட்டை யாரை பார்த்துக்கொள்ள சொல்வது என்று பார்க்கும் போது ஏன் அந்த வீட்டை வடிவேலு பார்த்துக்கொள்ள கூடாது. எனவே அந்த வீட்டை வடிவேலுவிடம் கொடுத்து விட்டால் வடிவேலு அந்த வீட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வார். அங்கு இருந்து தான் இந்த கதை தொடங்கியது.” என பதில் அளித்துள்ளார் தொடர்ந்து சந்திரமுகி திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் P.வாசு அவர்களின் அந்த பிரத்தியேக பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.