800 திரைப்படம் தொடர்பாக விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறிய இயக்குனர் பாரதிராஜா !
By Sakthi Priyan | Galatta | October 15, 2020 12:10 PM IST

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அப்போதே, இதற்கு ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
படத்துக்கு 800 என தலைப்பு வைத்துள்ளனர். கனிமொழி படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். விஜய் சேதுபதி, முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது உறுதியானதை அடுத்து அவருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும். கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம்.
இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க. தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா.
சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.
அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே என கேட்கின்றனர். அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம், அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்
இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம், காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள் என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பாரதி ராஜா.
Bigg Boss 4 Tamil New Promo - VJ Archana teases Suresh Chakravarthy
15/10/2020 12:11 PM
Zee Tamil's version of Bigg Boss is here - fans surprised with the new promos!
15/10/2020 11:35 AM
#ShameonVijaySethupathi controversy - 800 team issues official statement
15/10/2020 10:42 AM