2019 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் டெல்லி முதல் இடமும், மும்பை 2 வது இடமும், பெங்களூரு 3 ஆம் இடமும் பிடித்துள்ளதாகத் தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய குற்றப் பிரிவு காப்பக ஆணையம், ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன் கொடுமைகள், பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து தற்போது ஒரு அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை, தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் வெளியிட்டு உள்ளது. 

அந்த அறிக்கையின் படி, “கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகம் நடைபெற்ற நகரங்களின் அடிப்படையில் தலைநகர் டெல்லி முதல் இடம் பிடித்து இருந்தது. டெல்லியைத் தொடர்ந்து மும்பை 2 வது இடம் பிடித்து இருந்தது. 

அதன் தொடர்ச்சியாக, 3 ஆம் இடத்தில் காசியாபாத் நகரமும், 4 வது இடத்தில் கான்பூர் நகரமும், 5 வது இடத்தில் பெங்களூரு நகரமும் இடம் பெற்று இருந்தது. 

இந்நிலையில், கடந்த ஆண்டும் 2019 ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் டெல்லி 431 வழக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, 377 வழக்குகளுடன் மும்பை நகரம் முந்தைய ஆண்டைப் போலவே கடந்த ஆண்டும் 2 வது இடம் பெற்று உள்ளது. 

ஆனால், முந்தைய ஆண்டுகளில் 5 இடத்தில் இருந்த பெங்களூரு நகரம் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் புரிந்ததில் 158 வழக்குகளுடன் 3 வது இடம் பிடித்து உள்ளது. 

அதே போல், முந்தைய ஆண்டில் 4 வது இடத்தில் கான்பூர் நகரம், கடந்த ஆண்டு 117 வழக்குகளுடன் கான்பூர் நகரம் அதே 4 வது இடம் பிடித்து உள்ளது. 

அத்துடன், 115 வழக்குகளுடன் நாக்பூர் நகரம் 5 வது இடத்தில் உள்ளன. அதனைத் தொடர்ந்து, 114 வழக்குகளுடன் காசியாபாத் நகரம் முந்தைய ஆண்டில் 3 இடத்தில் இருந்த நிலையில், கடந்த 2019 ஆம் அண்டு 6 வது இடத்திற்கு சென்று உள்ளது. 

அதே போல், 110 வழக்குகளுடன் புனே நகரம் 7 வது இடத்திலும், 103 வழக்குகளுடன் அகமதாபாத் நகரம் 8 வது இடத்திலும் உள்ளன.

கொச்சி நகரம் 83 வழக்குகளுடன் 9 வது இடத்திலும், இந்தூர் நகரம் 82 வழக்குகளுடன் 10 வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில், தமிழ் நாடு முதல் 10 இடங்களில் இடம் பிடிக்கவில்லை என்பது, சற்று ஆறுதலான விசயமாக உள்ளது.

இதனிடையே, இந்தியாவில் நாள்தோறும் 87 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முன்பை விட தற்போது 7 

சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் கடந்த மாதம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.