சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி செலுத்தியதாகவும், சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய - மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபம் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை என்றும், மார்ச் 24ம் தேதி பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கி விட்டோம். அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் 2 சதவிகித அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டுமென நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது.

மண்டபம் காலியாக இருந்ததால் மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதால், அதுதொடர்பாக தன் தரப்பில் மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அதுவரை சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருக்கிறார்.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென என ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது.

அவர் தாக்கல் செய்த மனுவில், `ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிடவேண்டும், கொரோனா கால வரி குறைப்புக்கு ராகவேந்திரா மண்டபத்திற்கு தகுதி உள்ளது' என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, `மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக' நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அத்துடன், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் நீதிபதி எச்சரித்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

``நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா? ஒரு வாரத்தில் அவசரம் அவசரமாக வழக்கு தொடர்ந்தது ஏன்?" என்றும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23ல் கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா என கேள்வி எழுப்பினார். மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும் எனவும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா என கேள்வி எழுப்பிய நீதிபதி, நடிவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றவில்லையா எனவும், நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா என்றும் கேட்டனர்.

இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். அதன் பின்னர் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து, அதற்கான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கின் மீதான உத்தரவை பிறகு பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்தார்.