திரையுலகில் சின்ன கலைவாணராக திகழ்பவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவர் மரம் நடுவதை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். மரம் நடுங்கள், சுற்றுச் சூழலை காப்பாற்றுங்கள் என்று தான் அவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் மேடைகளில் தொடர்ந்து அவர் இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா துறை சார்ந்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் மிகப்பெரிய சிக்கல் இந்த வதந்தி தான். நட்சத்திரங்கள் பற்றி நாள் தோறும் ஏதாவது ஒரு செய்தி பரவிக் கொண்டே தான் இருக்கின்றது. குறிப்பாக நடிகர்களின் சொந்த வாழ்க்கை பற்றி வதந்திகள் அதிக அளவில் பரவுவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் காமெடி நடிகர் விவேக்கின் தாயார் நேற்று இரவு காலமாகி விட்டார் என சமூக வலைத்தளங்களில் சிலர் தகவல் பரப்பி விட்டுள்ளனர். 

ஆனால் உண்மையில் விவேக்கின் தாயார் சென்ற வருடமே இறந்துவிட்டார். ஒரு வருடம் கழித்து தற்போது அவர் இறந்தது போல ஒரு செய்தியை சிலர் இணையத்தில் பரப்பி உள்ளனர். இது பற்றி அறியாத பலரும் இந்த தகவலை அதிகம் ஷேர் செய்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக ரசிகர் ஒருவர் ட்விட்டரில் விவேக்கை டேக் செய்து ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் நடிகர் விவேக் சார் அவர்களின் தாயார் 2019ல் இறந்துவிட்டார். ஆனால் நேற்று இரவுதான் இறந்ததாக பொய்யான தகவல் பரப்பபடுகிறது. என்ன ஏது எப்போ என்று சரியாக தெரியாமல் பல பொய்யான தகவல்கள்பரப்பபடுகிறது. ஒரு தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்று சொன்னால் எதையுமே யோசிக்காமல் ஷேர் பண்றாங்க என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் கூறியுள்ள விவேக் என் தாயார் இயற்கை எய்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது.ஆனால் செய்தி பரப்புவோருக்கு அவர் மேல் அவ்வளவு அலாதி பிரியம் போலும்.இந்த வருடமும் இயற்கை எய்த வைக்கிறார்கள்.போகட்டும் விடுங்கள். என்னை பொறுத்த வரையில் என் தாய் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார் என எமோஷனலாக பதிவு செய்துள்ளார். 

நடிகர் விவேக் கடைசியாக தாராள பிரபு படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் விவேக். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்த படம் பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். தான்யா ஹோப் நாயகியாக நடித்திருந்தார்.ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார். 

கொரோனா நேரத்தில் மக்கள் மாஸ்க் அணியும் விதம் குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் விவேக். உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் விவேக். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன், இந்த படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.