இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்முட்டி இணைந்து நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான தளபதி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சந்தோஷ்சிவன். ஆனால் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே மலையாளத்தில் 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவு செய்து  தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

cinematographer santosh sivan father sivan passes away due to heart attack 

தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினத்தின் ரோஜா ,இருவர், உயிரே, ராவணன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி ,தர்பார் உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த அசோகா திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து அஜித்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தி டெரரிஸ்ட், உருமி, இனம் உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அடுத்ததாக இவரது இயக்கத்தில் ஜாக் அண்ட் ஜில் திரைப்படம் தயாராகி வருகிறது. 

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் இன்று காலை உயிரிழந்துள்ளார். மலையாள திரை உலகின் பழம்பெரும் ஒளிப்பதிவாளரான சிவன் தன்னுடைய சிறந்த படைப்புகளுக்காக மூன்று முறை தேசிய விருது பெற்றவர். 89 வயதான சிவன் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்திய திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனின் தந்தையும் மூத்த  ஒளிப்பதிவாளரான சிவனின் மறைவுக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.