சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராகவும்,நடிகையாகவும் இருந்து வந்தவர் சித்ரா.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.மிகவும் ஜாலியான,தைரியமான ஒரு பெண்ணாக சித்ரா அனைவராலும் புகழப்பட்ட வந்தார்.

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களையும்,பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவிற்கு ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது அனைவரும் அறிந்ததே ஆனால் இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் பதிவு திருமணம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஹேம்நாத் பலமுறை படப்பிடிப்புக்கு சென்று பிரச்சனை செய்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனஅழுத்தம் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் தெரிவித்து வந்த நிலையில் கடந்த 5 நாட்களாக ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.நேற்று நள்ளிரவு சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.