தமிழ் திரை உலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை ஷெரின் நடிகர் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நடிகரின் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்த பீமா திரைப்படத்தில்  ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஷெரின், ஒரு இடைவெளிக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். கிட்டத்தட்ட போட்டியின் இறுதி வரை சென்ற ஷெரின் சிறப்பாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

முன்னதாக கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் 16 ஆம் தேதி, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்தார்.

இந்நிலையில் மீண்டும் நடிகை ஷெரினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

மீண்டும் கோவிட் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது! இம்முறை காய்ச்சல், தொண்டை கரகரப்பு, தலைவலி இன்னும் சில அறிகுறிகளோடு தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்… அறிகுறிகள் இருக்கிறதா என்று பாருங்கள்… வீட்டுக்குள் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், இரண்டு முக கவசம், மூன்று முக கவசம் மற்றும் பாதுகாப்பு கவச உடை என என்னென்ன இந்த மூன்றாவது அலையில் இறுதிவரை பாதுகாப்பாக பயணிக்க தேவையோ அதைச் செய்யுங்கள்! ஏய்ய் 2022!!

என தெரிவித்துள்ளார்.