அருண் விஜயின் சினம் பட ரன் டைம் குறித்த தகவல்!
By Anand S | Galatta | September 13, 2022 17:49 PM IST

தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யானை திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து முதல் முறை வெப் சீரிஸில் களமிறங்கிய அருண் விஜய், இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடித்த தமிழ் ராக்கர்ஸ் சமீபத்தில் வெளியானது.
நீண்ட இடைவெளிக்கு பின் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் அருண் விஜய் நடிப்பில் வரிசையாக பார்டர் & அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.
இந்த வரிசையில் முன்னதாக இயக்குனர் GNR.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் காவல் துறை அதிகாரி வேடத்தில் கதாநாயகனாக நடித்த திரைப்படம் சினம். பல்லாக் லால்வானி கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி ஆகியோர் சினம் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கோபிநாத் ஒளிப்பதிவில், A.ராஜாமுஹமது படத்தொகுப்பு செய்துள்ள சினம் திரைப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார்.ஸ்டண்ட் சில்வாவின் மிரட்டலான ஸ்டண்ட் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் சினம் திரைப்படத்தை மூவிஸ் ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் R.விஜய்குமார் தயாரித்துள்ளார்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வருகிற செப்டம்பர் 16-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள சினம் திரைப்படத்தின் ரன் டைம் குறித்த தகவல் தற்போது வெளியானது. சினம் திரைப்படத்தின் மொத்த ரன் டைம் 1 மணி நேரம் 54 நிமிடங்கள் அதில், முதல் பாதி 1மணி நேரம் 4 நிமிடங்கள் 52 வினாடிகள் எனவும், இரண்டாம் பாதி 49 நிமிடங்கள் 29 வினாடிகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.