தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கதாநாயகர்களும் தனித் தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் ஆனால் ஒட்டு மொத்த ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்ற ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.  பல விதமான கதாபாத்திரங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஜனங்களின் நாயகனாகத் திகழ்கிறார்.

இந்த மாதத்தில் மட்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ்ஸான நிலையில், அடுத்ததாக மலையாளத்தில் 19(1)(a) , தமிழில் மாமனிதன் & யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் ஹிந்தியில் மும்பைக்கார் உள்ளிட்ட திரைப்படங்கள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகளில் இருக்கின்றன.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்திலும், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் & ரஜினிமுருகன் படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் VJS46 படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதில் விஜய் டிவி புகழ் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

டி.இமான் இசையில் தயாராகும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிரபல மாடல் அழகியும் நடிகையுமான அனுக்ரீத்தி வாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். அனுக்ரீத்தி வாஸ்-ன் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.