தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கடாவர். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான கடாவர் சில தினங்களுக்கு முன்பு நேரடியாக DISNEY PLUS HOTSTAR தளத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

அடுத்ததாக மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அமலா பால், தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் கிறிஸ்டோஃபர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக தமிழில் அமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

இதனிடையே நடிகை அமலாபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது நண்பரும் முன்னாள் காதலருமான பவீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பாடகர் பவீந்தர் சிங், அமலாபாலுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை அமலாபாலின் அனுமதியின்றி தவறான தகவல்களோடு பதிவேற்றம் செய்திருந்தார்.

இதுகுறித்து நடிகை அமலாபால் திருமணத்தை மையப்படுத்திய போட்டோஷூட்க்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தவறாக பதிவேற்றம் செய்திருப்பதாக விளக்கம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மனரீதியாகவும், பணம் கேட்டும் தொடர்ந்து அமலாபாலுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார் பவீந்தர் சிங்.

மேலும் அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் காவல்துறையினரை அணுகிய அமலாபால் அளித்த புகாரின் பெயரில் 16 பிரிவுகளின் கீழ் பவீந்தர் சிங் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்த இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.