விடா முயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் சின்னமாய் விளங்கும் லெஜண்ட் சரவணன் அவர்கள் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் தி லெஜண்ட். தனது தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படத்தை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ளனர்.

கடந்த ஜூலை 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தி லெஜண்ட் திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி 45 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடித்த சமயத்தில் தன் மீது எறியப்பட்ட அத்தனை எதிர்மறை விமர்சன அம்புங்களையும் ஏணிப்படிகளாக மாற்றி, உயர்ந்து தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக தடம் பதித்த லெஜண்ட் சரவணன் அவர்கள் நடிப்பில் முதல் படமாக வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் மீதும் அதே மாதிரியான பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த போதும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து தற்போது ரசிகர்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

வழக்கமான என்டர்டெய்னிங் திரைப்படமாக மட்டும் இல்லாமல் சமூக அக்கறைகொண்ட திரைப்படமாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்த தி லெஜண்ட் திரைப்படத்தின் OTT ரிலீஸுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மாபெரும் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள லெஜண்ட் சரவணன் அவர்கள் தனது அடுத்த திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகளிலும் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.