மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து அதிக காளைகளை அடக்கி பிரபாகரன் என்ற இளைஞன்  3 வது ஆண்டாக இந்த ஆண்டும் முதல் பரிசு வென்று அசத்தி உள்ளார்.

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளைய தினம் நடைபெற உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக, அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன.

அதன்படி, மதுரை பாலமேடு கிராமத்தில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேற்றைய தினம் திமுக அமைச்சர்களான பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். 

அதன் படி, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அத்துடன், இந்த போட்டி தொடங்கும் முன்பாக ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

முன்னதாக பாலமேடு கிராம கமிட்டி மகாலிங்க சாமி கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது.

அதன்படி, நேற்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது, மாலை வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

போட்டியில் சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், காளையர்களுக்கு போக்குக் காட்டிய காளைகளுக்கும் தங்கக் காசு, கட்டில், பீரோ  உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. 

காளையர்களுக்கு சவால்விட்டு வகையில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, திமிலை அடக்கியே தீருவேன் என்று, களத்தில் காளைகளுக்கு போட்டியாக காளையர்களும் மல்லுக்கட்டி நின்றதால், பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

எனினும், மாலை 5 மணி அளவில் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. இந்த போட்டியில் 729 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன 

என்றாலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞன், 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.  

குறிப்பாக, இந்த பாலமேடு ஜல்லிக்கட் போட்டியில் தொடர்ந்து 3 வது ஆண்டாக அதிக காளைகளை அடக்கி முதல் பரிசுகளை வென்று பிரபாகரன் என்ற இளைஞன் அசித்தி உள்ளார். அவருக்கு, மதுரையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.