தென்னிந்திய திரை உலகில் குறிப்பிடப்படும் சிறந்த நடிகர்களில் ஒருவராக தான் ஏற்று நடிக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் மிக சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் நாசர். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் நாசர் பொறுப்பு வகிக்கிறார்.

ஹீரோ, வில்லன், காமெடியன், குணசித்திர வேடங்கள் என தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கன கச்சிதமாக பொருந்தி நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் நாசர், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வீரபாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ் & தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் நாசர் தற்போது நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது காயமடைந்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்று வந்த தெலுங்கு தொடங்கி படத்தின் படப்பிடிப்பின்போது நாசருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

சுஹாசினி மணிரத்னம், மெஹரின் பிர்ஸாடா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடித்து வந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக திடீரென காயமடைந்த நாசர் அவ‌ர்க‌ள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக பயப்படும்படியான பெரிய காயம் ஏற்படவில்லை என்றும், வெகுவிரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் நாசர் விரைவில் காயத்தில் இருந்து மீண்டு வர கலாட்டா குடும்பம் வேண்டிக் கொள்கிறது.