இந்தியை இந்தியாவின் அலுவலல் மொழியாக மாற்ற முயற்சிக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் பிரபலங்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் இந்தியைத் திணிக்க முற்பட்டபோது, தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இந்தி மொழி பின் வாங்கிக்கொண்டது. இதனால், தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்கக் கோரிய போராட்டங்கள் அமைதியாகிப் போனது. 

ஆனால், தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு, பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் மெல்ல திணிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள அரச பணிகளுக்கு வேற மொழி பேசுபவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இதில், அதிகம் வட மாநிலத்தவர்களே தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் பணி அமர்த்தப்பட்டதாகத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல தமிழ் அமைப்புகள் அடிக்கடி போராட்டத்தில் குதிப்பது, தற்போது தமிழ்நாட்டில் வாடிக்கையாக நடக்கும் ஒரு விசயமாக இங்கு கால சூழல் மாறியிருக்கிறது.

இந்த நிலையில் தான், நேற்று முன்தினம் “இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல” என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

அதாவது, நாடாளுமன்ற அலுவல் மொழி குழு கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “மத்திய அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளார் என்றும், இதன் மூலமாக இந்தி மொழியின் முக்கியத்துவம் கூடும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “இந்திய அமைச்சரவையின் செயல்பாடுகள் 70 சதவீதம் இந்தி மொழியிலேயே இருப்பதாகவும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கான மொழியாக இந்தியை பயன்படுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்ட என்றும், வெவ்வேறு மாநிலத்தவர்கள் தங்களுக்குள் பேசும் போது பயன்படுத்தும் மொழி இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும்” என்றும், அமித் ஷா பேசியிருந்தார்.

இது, நாடு முழுவதும் பரவிய நிலையில், இந்தியாவில் பல மொழிகள் பேரும் பல்வேறு மாநிலங்கள் இருப்பதால், இந்தி மொழியை தாய் மொழியாக கொள்ளாத பல மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, இது தமிழ்நாடு உள்ளிட்ட பிற மொழிகள் பேசும் மாநிலங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.

அந்த வகையில், வட மாநிலங்களைத் தவிர தென் மாநிலங்களில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த இந்தி மொழி கருத்துக்கு, கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தை, பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.” என்று, கூறியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கருத்தை, டிவிட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து உலக புகழ்பெற்ற இந்தியாவின் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் மிகவும் சூசகமாக, தனது கருத்தினை தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ள கருத்தில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதன்படி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற கவிதையில் வரும் வரிகளான, “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்ற, வரிகளை ஏ.ஆர்.ரகுமான் சுட்டிக்காட்டி தனது கருத்தின் நிலைபாடு குறித்து தெளிவுக்பபடத்தி உள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ழ கரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோ ஒன்றையும்” ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருக்கிறார். 

குறிப்பாக, “ழ”  கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே “தமிழணங்கு” என்று, புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளும் அதில்  இடம் பெற்று உள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, “வடக்கே வாழப்போன தமிழர், இந்தி கற்கலாம். தெற்கே வாழவரும் வடவர், தமிழ் கற்கலாம். மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர, திணிப்பு சார்ந்ததல்ல. வட மொழி ஆதிக்கத்தால், நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம். இதற்குமேலும் இந்தியா? தாங்குமா இந்தியா?” என்று, தன்னுடைய கருத்தை டிவிட்டர் பக்கத்தில் வைரமுத்து பதிவு செய்து உள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள T R B Rajaa, “நான் இந்தி அல்லது எந்த மொழியையும் வெறுப்பவன் இல்லை. ஆனால், இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழியாக முயற்சித்தால் பல சிறு மொழிகள் அழிந்து  விடும். இந்தி  செயற்கையாக உருவாக்கபட்ட சமீபகால மொழி. அதற்கு இந்தியா முழுவதற்கும்  இணை மொழியாகும்  தகுதி  இல்லை. வேலை வாய்ப்புகள் குறைவு” என்று, பதிவிட்டு உள்ளார்.

இதனிடையே, “வரும் 24 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரி வர உள்ளதாக அந்த மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.