குரங்கு ஒன்று, ஆட்டோ ஓட்டுநரை பழிவாங்க 22 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்த சம்பவம் திகிலை கிளப்பி உள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் கொட்டிகெஹரா எனும் காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள கிராமத்தில் பொன்னட் மக்காக் என்ற வகையைச் சேர்ந்த 5 வயதான குரங்கு ஒன்று, வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வலம் வந்துள்ளது. 

இதனையடுத்து, உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த அந்த குரங்கு, பல்வேறு அட்டகாசங்களில் ஈடுபட்டு உள்ளது.

அத்துடன், ரோட்டில் நடந்து செல்லும் நபர்களிடமிருந்து அவர்கள் கையில் கொண்டு செல்லும் உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களையும் அந்த குரங்கு அடிக்கடி பறித்துச் செல்லுவதும் வாடிக்கையாக நடந்து உள்ளது. 

அத்துடன், கர்நாடகாவில் பள்ளிகள் திறந்த நிலையில், அங்குள்ள கொட்டிகெஹரா பகுதியில் செயல்பட்டு வரும் உள்ள மொரார்ஜி தேசாய் பள்ளி அருகே அந்த குரங்கு நடமாடி வந்ததால் அங்கு பயிலும் மாணவர்கள் குரங்கால் பீதியடைந்தனர். இதனால், இது குறித்து சில மாணவர்கள் குரங்கின் அட்டகாசம் குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இதன் காரணமாக, குரங்கை பிடிக்க முடிவு செய்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று வனத்துறையினர் கொட்டிகெஹரா கிராமத்துக்கு வந்தனர். ஆனாலும், அந்த குரங்கை எளிதாக பிடிக்க முடியாத காரணத்தால், அந்த ஊரைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் அந்த ஊரில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் போன்றோரை வனத்துறையினர் உதவிக்கு அழைத்தனர். 

அதன் படி, ஒரு திசை பக்கமாக அந்த குரங்கை வரச்செய்து, திட்டமிட்டபடி அங்கிருந்தவர்கள் அனைவரும் குரங்குக்கு அணை கட்டி நின்றனர்.

அந்த நேரத்தில் அந்த ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜகதீஷ் என்ற பர், வனத்துறையினர் கூறியபடி குறிப்பிட்ட ஒஐ திசையில் குரங்கை பயமுறுத்தித் திசைதிருப்ப முயன்றுள்ளார். இதனால், கடும் கோபம் அடைந்த அந்த குரங்கு, திடீரென ஜகதீஷ் பக்கம் பாய்ந்து அவரை தாக்கி, கையில் கடித்து பயங்கரமாக புரண்டி எடுத்து உள்ளது. 

இதனால், பயந்து போன ஜக்தீஷ், அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார். ஆனாலும், அவர் செல்லும் திசையெல்லாம் அவரைத் துரத்தி வந்த அந்த குரங்கு, அவரை விரட்டிக்கொண்டு வந்துள்ளது. 

இறுதியாக, அவர் தனது ஆட்டோவுக்குள் சென்று பதுங்கிக்கொண்ட நிலையில், விடாமல் துரத்தி வந்த அந்த குரங்கு, அவரின் ஆட்டோவை தாக்கி கூரையை கிழித்தது. இதனையடுத்து, சுமார் 30 க்கும் மேற்பட்டவர்கள் கிட்டதட்ட 3 மணி நேரம் போராடி, அந்த குரங்கை ஒரு வழியாகப் பிடித்தனர்.

இப்படி பிடிபட்ட குரங்கை, வனத்துறையினர் 22 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கொண்டு சென்று அங்குள்ள பலுர் காட்டுப் பகுதியில் விட்டுவிட்டு திரும்பி உள்ளனர்.

ஆனால், அடுத்த ஒரு வாரத்துக்குள் அந்த குரங்கு அந்த கிராமத்துக்குத் திரும்பி வந்திருக்கிறது. அதுவும், பலுர் காட்டுப்பகுதி வழியாக வந்த ஒரு லாரியின் மீது ஏறிய அந்த குரங்கு, அந்த லாரியிலேயே கிட்டாட்ட 22 கிலோ மீட்டர் பயணம் செய்து, மீண்டும் கொட்டிகெஹரா கிராமத்துக்கு வந்து சேர்ந்து சம்மந்தப்பட்ட நபரைத் தேடி உள்ளது. 

குரங்கு மீண்டும் கிராமத்துக்கு வந்ததை அறிந்த ஆட்டோ ஓட்டுனர் ஜக்தீஷ், பயந்துபோய் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்து உ்ளளார். 

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், மீண்டும் பெரும் போராட்டத்துக்கு பிறகு, அந்த குரங்கை பிடித்து நேற்று முன் தினம் வெகுதூரம் கொண்டு சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் விட்டுவிட்டு ஊர் திரும்பி உள்ளனர்.

இது குறித்து பேசிய வனத்துறையினர், “குரங்கு பழிவாங்குவதற்காக இத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்து வந்திருப்பதை இப்போது தான் பார்க்கிறோம் என்றும், அவருக்கும் அந்த குரங்குக்கும் ஏற்கனவே முன்பகை ஏதும் இருந்ததா என்று தெரியவில்லை” என்றும், அவர் தெரிவித்து உள்ளார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.