கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, சீனாவிலிருந்து புதிய வைரசான “குரங்கு பி” வைரஸ் என்னும் புதிய நோய் தொற்று பரவுவதாக சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கொரோனா என்னும் கோரப் பிடியில் இருந்து இன்னமும் எந்த உலக நாடுகளும் முழுமையாக விடுபடவில்லை. ஆனால், அதற்குள் நாளுக்கு நாள் புதிது புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கொரோனாவின் 2 அலை, 3 வது அலை என்று பரவத் தொடங்கி, 4 வது அலையும் இன்னம் சில மாதங்களில் வெளிவர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அத்துடன், சமீபத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ், அதிக வீரியம் கொண்டது என்று கண்டறியப்பட்டது. 

ஆனால், அதன் தொடர்ச்சியாக, டெல்டா வகை வைரசை விடவும் பயங்கரமான லாம்ப்டா வகை கொரொனா வைரஸ், உலகின் 30 நாடுகளில் வேகமாகப் பரவி உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் எச்சரிக்கை விடுத்தனர். 

சூழல் இப்படி இருக்கையில், கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, சீனாவிலிருந்து புதிய வைரசான “குரங்கு பி” வைரஸ் என்னும் புதிய நோய் தொற்று பரவுவதாக, நாட்டு மக்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

குறிப்பாக, சீனாவில் “குரங்கு பி” வைரஸ் தாக்குதலுக்கு, அந்நாட்டின் கால்நடை மருத்துவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். 

சீனாவை சேர்ந்த 53 வயதான கால்நடை மருத்துவர் ஒருவர், கடந்த மார்ச் மாதம் 2 குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். 

இதனையடுத்து, அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு அந்த மருத்துவருக்கு வாந்தி, காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது, நாளடைவில் நரம்பு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதனையடுத்து, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்நாட்டின் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, உயிரிழந்த மருத்துவரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவருக்குப் புதிதாக “குரங்கு பி”  Monkey B virus (BV) என்னும் புதிய தொற்று இருந்தது தெரிய வந்தது. 

இந்த வைரஸ் நோயானது, அந்நாட்டில் உள்ள மகாக்ஸ் வகை குரங்குகளில் கடந்த 1932 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது என்றும், இந்த வைரஸ் தாக்கி சீனாவில் மனிதர்கள் உயிரிழப்பது இதுவே முதன் முறை என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனால், அந்நாட்டு மக்கள் கொரோனா வைரசை பீதியைப் போலவே, இந்த “குரங்கு பி” வைரசும் அந்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

முக்கியமாக, இந்த “குரங்கு பி” வகை வைரஸானது குரங்குகளின் கழிவுகள் மற்றும் அதன் சுரப்பிகள் மூலமாக பரவுவதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ரத்த மாதிரிகளைச் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில், அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் நோய் தொற்று எதுவும் ஏற்படவில்லை என்றும், அனைவரும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மிக முக்கியமாக, “கடந்த 1932 ஆம் ஆண்டு இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, இது வரை வெறும் 50 பேர் மட்டுமே இந்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், இந்த நோயால் இதுவரை 21 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்” என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, இந்த நோயானது “குரங்குகளிடம் கடி படுதல் அல்லது குரங்குகளால் ஏற்படும் காயங்கள் மூலம் பரவுகிறது என்றும். குரங்குகளின் கழிவுகள் தோலில் வெளியேறும் திசுக்களால் இந்த நோய் பரவுவதாக” மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

அதே போல், “ ‘குரங்கு பி’ வைரஸ் மனிதர்களைத் தாக்கும் போது ஒன்று முதல் 3 வாரங்களில் அறிகுறிகள் தென்படும்” என்று, எச்சரிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், “காய்ச்சல், சோர்வு, அரிப்பு, தசைவலி, காயங்கள் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது. 

“இந்த நோய் பரவத் தொடங்கியதும், நாளடைவில் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கி, மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் குரங்கு உள்ளிட்ட மிருகங்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்கள், ஆய்வு மைய பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும்படி” சீனாவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால், சீனா மக்கள் புதிய வகையான வைரஸ் நோயால் கடும் பீதியடைந்து உள்ளனர்.