சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில், பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஸ்வேதா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் இன்று பட்டப் பகல் நேரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அந்த இளம் பெண்ணை  குத்தி உள்ளார். 

இதில், பலத்த காயம் அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டபடியே, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.

இளம் பெண்ணின் கதறல் சத்தம் கேட்டு அங்கு பொது மக்கள் கூட முயன்ற நிலையில், அந்த இளம் பெண்ணை கத்தியால் குத்திய வேகத்தில், தன்னை தானே அந்த இளைஞன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். 

இதில், அந்த இளைஞனும் பலத்த காயம் அடைந்த நிலையில், அங்கு கூடிய பொது மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, படுகாயம் அடைந்த இருவரையும் உடனடியாக சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு, படுகாயம் அடைந்த இருவருக்கும் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எனினும், தன்னை தானே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக சேலையூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மாணவியின் பெயர் ஸ்வேதா என்பதும், சம்மந்தப்பட்ட இளைஞரின் பெயர் ராமு என்பதும் தெரிய வந்துள்ளது. 

'இளம் வயதினர் இருவரும், காதல் விவகாரமாக இருக்கலாமோ?” என்ற கோணத்தில் போலீஸார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.

முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த சுவாதி என்ற இளம் பெண், சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்தது சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது. 

இந்த கொலையில் சம்மந்தப்பட்ட ராம்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். 

இந்த சூழலில் தான், மீண்டும் அதே போல் ஒரு கொலை சம்பவம் சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் நடைபெற்றிருப்பது கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.