நாடு முழுவதும் இன்று மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், நீட் தேர்வு எழுதவிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய தினம் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 

அதன் படி, நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக, நாடு முழுவதும் 3862 மையங்கள் அமைக்கப்பட்டு ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

இதில், தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 1,12,889 பேரில் 11236 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து விண்ணப்பித்து இருக்கிறார்கள். 

அதன் படி, தமிழ்நாடு முழுவதும் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. சென்னை மண்டலத்தில் 33 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. அதில் மொத்தம் 17,996 பேர் தேர்வு எழுதுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 20 மையங்களில் 10,314 மாணவர்களும் கோவை மாவட்டத்தில் 7 மையங்களில் 6,057 பேரும் தேர்வெழுதுகிறார்கள்.

இந்த நிலையில் தான், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் - ரேவதி தம்பதியின், 20 வயது மகன் தனுஷ், நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில், இன்று அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதாவது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசிலாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த தனுஷ், எப்படியாவது மருத்துவராக வேண்டும் என்கிற கனவோடு நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்திருக்கிறார்.

அதன் படி, இது வரை 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், இன்று 3 வது முறையாக தனுஷ் நீட் தேர்வு எழுதுவதற்குத் தன்னை தயார்ப்படுத்தி வந்தார். இதற்காக, அவர் கடந்த ஓராண்டாகத் தன்னை முழுவதுமாக தயார்ப்படுத்திக்கொண்டு வந்தார். 

இந்த நிலையில் தான், நள்ளிரவு 1 மணி வரை மாணவர் தனுஷ், தனது தந்தையுடன் நன்றாகப் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தனுஷ் மற்றும் அவரது தந்தை இருவரும் தூங்கச் சென்ற நிலையில், அதன் பிறகு அதிகாலை நேரத்தில் தனுஷ், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

அதிகாலையில் எழுந்த தனுஷின் பெற்றோர் மகனின் நிலையை எண்ணி கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்து வரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு 
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மருத்துவர் ஆகும் கனவோடு நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர், இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கூழையூர் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து பேசியுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது” என்று, கூறியுள்ளார். 

“குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என்றும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நாளை சட்டப் பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.