சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தான் குளம் காவல் நிலையம், சாத்தான்களின் நிலையமா? என்ற ஒரு மாபெரும் கேள்வி எழுத் தொடங்கி உள்ளது. தற்போது வெளியாகும் ஒவ்வொரு தகவல்களையும் வைத்துப் பார்க்கும் போது, சாத்தான் குளம் காவல் நிலையத்தில் அடுக்கடுக்கான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பது அப்பட்டமாகத் தெரிய வருகிறது. இதற்கு மேலும் ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது மகேந்திரன் உயிரிழப்பு..

இது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாத புரத்தைச் சேர்ந்த மகேந்திரனின் தாயார் வடிவு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “ எனக்கு மூத்த மகன் துரை, 2 வது மகன் மகேந்திரன், மகள் சந்தானம் என்று, 2 மகன்கள் ஒரு மகள் இருந்தனர். ஆனால், அதில் ஒருவர் தற்போது உயிரோடு இல்லை. 

எனது மகன்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம், பாப்பான் குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தனர். அந்த நேரத்தில், தூத்துக்குடி மாவட்டம் தெற்கு பைகுளம் அருகே ஜெயக்குமார் என்பவர் மர்ம கும்பலால் கடந்த மே மாதம், 18 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது குறித்து, கொலையான ஜெயக்குமாரின் தம்பி ஆழிகுமார், சாத்தான் குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அது குறித்து வழக்குப் பதிவு செய்த சாத்தான் குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். இதனையடுத்து, கடந்த மே 22 ஆம் தேதி, சாத்தான் குளம் போலீஸ் ரகு கணேஷ் உட்பட சில போலீசார், எனது மூத்த மகன் துரையை தேடி எனது வீட்டிற்கு வந்தனர். 

அப்போது, 'ஜெயக்குமாரின் கொலை சம்பந்தமாகத் துரை மீது சந்தேகம் உள்ளது. விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்ல வேண்டும்' என்று கூறினர். ஆனால், அப்போது என் மகன் துரை வீட்டில் இல்லை.

பின்னர், மே 23 ஆம் தேதி பாப்பான் குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய என்ன வென்றால், கொலை சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பைகுளம், பாப்பான் குளத்திலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனது சகோதரி வீட்டில், மூத்த மகன் துரை இல்லாத நிலையில், என் 2 வது மகன் மகேந்திரன் மட்டும் இருந்துள்ளார். இதனால், என் 2 வது மகன் மகேந்திரனை, போலீசார் வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து சட்ட விரோதமாக அவரை கடுமையாகத் தாக்கிய பிறகு, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்டோர் என் மகன் மகேந்திரனை பயங்கரமாகக் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். குறிப்பாக, தலை, உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, மே 24 ஆம் தேதி இரவு நேரத்தில் என் மகன் மகேந்திரன் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அப்போது, போலீசார் தாக்கியது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும், உயர் அதிகாரிகளிடம் புகார் கூற கூடாது என்றும் போலீசார் சிலர் கடுமையாக எச்சரித்து அனுப்பி உள்ளனர். 

அதன் படி, வீடு திரும்பிய மகேந்திரனுக்கு போலீசார் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால், அடுத்த நாளே என் மகனைத்  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தேன். அவரை சோதனை செய்த மருத்துவர்கள், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும், மூளையில் ரத்தம் உறைந்துள்ளது என்றும் கூறினார்கள். இதனால், அதிர்ச்சி அடைந்த நாங்கள், அவரை எப்படியாவது குணமாக்கித் தரும்படி கெஞ்சினோம். 

அதன்படி, மகேந்திரனுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஜூன் 13 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனால், கடும் துயரத்திற்கு ஆளான நாங்கள் என் மகன் தாக்கப்பட்டு உயிர் இழந்தது குறித்து தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம். அதனைத் 

தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி புகாரி அளித்தோம். ஆனால், சட்டத்தை மீறிச் செயல்பட்ட போலீசார் மீது இதுவரை  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

சட்ட விரோதமாக என் மகனை காவல் நிலையம் அழைத்துச் சென்று தலை மற்றும் உடலில் கடுமையாகத் தாக்கிய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் தான்” என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “சாத்தான் குளம் தந்தை - மகன் உயிரிழப்பு சம்பந்தமாக தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. அதைப் போலவே, எனது மகன் மகேந்திரன் உயிரிழப்பு சம்பந்தமாகவும் சட்ட விரோதமாகக் காவல் நிலையம் அழைத்துச் சென்று மகேந்திரனைத் தாக்கியது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்றும் அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. தூத்துக்குடி எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு பிறபித்துள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோரும் பதில் அளிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், சாத்தான் குளம் தந்தை - மகன் லாக்கப் டெத் விவகாரத்தில் சிக்கி உள்ள அதே போலீசார் தான், மகேந்திரன் கொலை வழக்கிலும் சிக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மகேந்திரன் வழக்கும், போலீசார் மீதான நன்மதிப்பை மேலும் ஆதாள பாதாளத்திற்குக் கொண்டு செல்கிற என்பது மட்டும் உண்மையே. 

“போலீஸ்.. உங்களுக்கு இறக்கம் என்றால் என்னானே தெரியாதா? பொது மக்கள் மீது ஏன் இந்த அலட்சியம்? ஏன் இந்த கொலை வெறி?” என்ற கேள்விகளைத் தான் முன் வைக்கத் தோன்றுகிறது.. இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது...