“உயிருக்குப் பாதுகாப்பு இல்லை” என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையிலும், பாலியல் புகார் அளித்த பெண் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன் ஹார் பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளம் பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் பொருத்தக்கொள்ள முடியாமல், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து உள்ளார்.

இதனையடுத்து, தனது தாய் மற்றும் மகளுடன் அங்குள்ள ஒரு கிராமத்தில், ஆண் துணையே இல்லாமல் வசித்து வந்திருக்கிறார். 

இப்படியான சூழ்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த விஷ்னோய் என்பவர், பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், விஷ்னோய் என்பவர் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விஷ்னோய் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இது தொடர்பான வழக்கு, அங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. 

அதே நேரத்தில், இந்த வழக்கில் தாம் எப்படி சிறை செல்ல நேரிடும் என்று, பயந்து போன பாலியல் பலாத்காரம் செய்த விஷ்னோய், அந்த பெண்ணை மீண்டும் மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், பயந்துபோன அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் “என் உயிருக்குப் பாதுகாப்பில்லை” என்று, புகார் அளித்தார்.

ஆனால், இது தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்த பெண் பயத்திலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி அதிகாலை நேரத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து, குறிப்பிட்ட அந்த பெண்ணின் பெயரை சொல்லி அழைத்திருக்கிறார். 

இதனால், அந்த பெண் கதவைத் திறந்து வந்து பார்த்திருக்கிறார். அப்போது, கையில் மண்ணெண்ணெய் கேணுடன் வந்த அந்த நபர், சட்டென்று அந்த பெண்ணின் தலையில் ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதில், அந்த பெண்ணின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், இதில் அவருக்கு 90 சதவீத விழுக்காடு அளவுக்கு தீ காயம் ஏற்பட்டு உள்ளது. 

இதனையடுத்து, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அவசர அரசமாக அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக அங்குள்ள கோலுபுரா காவல் நிலைய போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

இதனிடையே, பாலியல் புகார் அளித்த நிலையில் “எனது உயிருக்குப் பாதுகாப்பில்லை” என்று, பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏற்கனவே காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டு உள்ளது, அப்பகுதியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.