திமுக கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டில், யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, எந்த கட்சிகளுடன் இழுபறி இன்னும் நீடிக்கிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்..

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில், திமுக உடனான கூட்டணியைப் பல கட்சிகளும் உறுதிப்படுத்தி இருந்தாலும், சில கட்சிகளிடம் தொகுதிப் பங்கீட்டில் இன்னும் இழுபறியே நீடித்து வருகிறது.
 
திமுகவை பொறுத்தவரையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு உள்ளன.

குறிப்பாக, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.  

அத்துடன், ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகளும், ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதில், திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும், மற்றொன்றில் தனிச் சின்னத்தில் மமக போட்டியிடுகிறது.

இவற்றுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேற்றைய தினம் 6 தொகுதிகளை ஒதுக்கி, திமுக ஒப்பந்தம் செய்தது.
 
இது தொடர்பாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “எண்ணிக்கை முக்கியமா? லட்சியம் முக்கியமா என்று கேட்டால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு லட்சியமே முக்கியம் என்று கூறுவேன்” என்று குறிப்பிட்டார். 

அது போல், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, மா.கம்யூனிஸ்ட், கொ.ம.தே.க ஆகிய கட்சிகளுடன், இன்னும் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரவில்லை.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளர் வீரப்ப மொய்லி, “திமுக உடனான தொகுதி ஒப்பந்தம் ஏறத்தாழ இன்று இறுதியாகி விடும்” என்று கூறியுள்ளார்.

அதாவது, திமுக கூட்டணியில் 40 தொகுதிகள் கேட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி. 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் தொகுதிப்பங்கீடு முடிவுக்கு வராமல், இழுபறி நீடிக்கிறது. அதிகபட்சம் 22 இடங்கள் வரை ஒதுக்க திமுக முன்வந்ததாகத் தெரிகிறது.

இதனால்,, “தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வராத நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தங்களை நடத்தும் விதம் குறித்து பேசி கண்கலங்கியுள்ளதாகவும்” தகவல் வெளியாகி உள்ளன. 

அதே போல், “ தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை” என்று, மதிமுக கூறியுள்ளது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி விரும்பும் தொகுதிகளான கடையநல்லூர், வாணியம்பாடி அல்லது ஆம்பூர் தொகுதிகளை திமுக விடம் கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இவற்றுடன், திருவாடானை, பாபநாசம், திருச்சி கிழக்கு, சிதம்பரம், மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கவும் அந்த கட்சி கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, “இந்திய கம்யூனிஸ்ட் பெற்ற தொகுதிகளை விட, நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம்” என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

“திமுக கூட்டணி தொகுதி உடன்பாட்டில் எண்ணிக்கையில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது என்றும், இது போன்ற தொகுதி பங்கீட்டில் அதிகமான தொகுதிகளைக் கேட்பது இயற்கையானதே” என்றும், கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால், தொகுதி பங்கீடு இன்னும் முழுமையாக முடியாமல் இழுபறி நீடிக்கிறது.

முக்கியமாக, “கூட்டணிக் கட்சிகளுடனான ஒற்றுமை சிதைவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பு திமுகவுக்கு இருப்பதாக” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே தொகுதி பங்கீடு இன்று கையெழுத்தாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த முன்னாள் நீதிபதியிடம், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.