திமுக தொகுதி பங்கீட்டில், அதன் கூட்டணி கட்சியான “காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப் பேரவை தொகுதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகமே தேர்தல் திருவிழாவில் விழா கோலம் பூண்டு உள்ளது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக - திமுக உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கட்சிகள் தங்களது கூட்டணியில் இருக்கும் பிரதான கட்சிகளுக்கு இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் இழுபறி தொடர்ந்து கொண்டே வருகிறது.

அதன் படி, அதிமுக கூட்டணியில் தேமுதிக உடன் இன்னும் தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி நீடிக்கிறது.

அதே போல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி உடனான தொகுதி பங்கீடு தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளன. 

அதாவது, முன்னதாக திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருந்தன. 

அதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை மதிமுக வுடன் திமுக தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. இதில், மதிமுக வுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. 

அதன் தொடர்ச்சியாகவே, திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி உடன் பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், “திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி உடன் பாடு இன்று காலை 10 மணிக்கு மேல் கையெழுத்தாகும்” என்று, கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

இவற்றுடன், இடைத் தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் - கே.எஸ். அழகிரி, தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சியும், எழுச்சியும் அளிக்கிறது” என்று, குறிப்பிட்டார்.

மேலும், “தொகுதிகளின் எண்ணிக்கை அரசியல் கள நிலவரத்தைப் பொறுத்த‌து, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் கூட போட்டியிடும்” என்றும், கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

குறிப்பாக, “தமிழகத்தில் பாஜக கால்பதிக்கக் கூடாது என்பதற்காகவும், அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்திற்காகவும், திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளதாகவும்” கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.