பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தடயங்களை மறைத்துள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், தனது உறவினரிடம் கொடுத்து வைத்திருக்கும் மற்றொரு செல்போனை மீட்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக ஆட்சியின்போது தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கு எதிராக, துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரில், “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கடந்த 5 ஆண்டுகளாக என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்து, என்னை மோசடியாக ஏமாற்றி உள்ளதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். 

நடிகையின் இந்த பாலியல் புகாரின் பேரில் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, அவரை கடந்த 20 ஆம் தேதி பெங்களூருவில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

பின்னர், மணிகண்டனை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, இந்த வழக்கு இன்னும் சூடுபிடித்தது.

அதாவது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கட்டாயத்தின் பேரில், நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததால் மருத்துவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், “மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் தான் நடிகை சாந்தினிக்குக் கருக்கலைப்பு செய்ததாகவும், நடிகையின் முகத்தில் உள்ள காயத்திற்கும் சிகிச்சை அளித்ததாகவும்” மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, மணிகண்டனிடம் இருந்து 2 செல்போன்களை தனிப்படை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். 

அந்த செல்போனில் இருந்து நடிகை சாந்தினிக்கு அனுப்பியிருந்த ஆபாச குறுஞ்செய்திகள், ஆபாச புகைப்படங்கள், நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அந்தந்த சமயங்களிலேயே டெலீட் செய்திருப்பதை, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கண்டுபிடித்தனர். 

அத்துடன், மணிகண்டனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களையும் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். 

இவற்றுடன், நடிகை சாந்தினியின் செல்போனையும் பறிமுதல் செய்து அதனையும் சைபர் ஆய்வுக்கு காவல் துறை அதிகாரிகள் உட்படுத்தினர்.

குறிப்பாக, மணிகண்டன் நடிகை சாந்தினிக்கு அனுப்பி டெலீட் செய்த மெசேஜ்களை மீட்டெடுக்கும் பணியில் தனிப்படை போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மிக முக்கியமாக, மணிகண்டன் பயன்படுத்திய மற்றொரு செல்போனை அவரது நெருங்கிய உறவினரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மணிகண்டன் வழக்கில், தற்போது மறைத்து வைக்கப்பட்டு உள்ள அந்த செல்போன், இந்த வழக்குக்கு மிக முக்கியமான ஆதாரமாகப் பார்க்கப்படுவதால், அதனைப் பறிமுதல் செய்யும் பணியில் தனிப்படை போலீசார் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.