ஒன்றாம் வகுப்பு மாணவி  ஒருவருக்கு  ஒருநாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்பட்ட சம்பவம் மானாமதுரையில் அரங்கேறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி ஊராட்சி பகுதியில் இயங்கிவரும் நடுநிலைப்பள்ளியில் தீப பிரபா என்ற சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சீயோன் நகரை சேர்ந்த இவர் நேற்று காலை பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது வகுப்பில்  50 ரூபாய் கிடைத்துள்ளது.  இதை கண்ட சிறுமி அந்த 50 ரூபாயை எடுத்து கொண்டு, நேராக ஆசிரியர் ராமலட்சுமியிடம் வந்து அதை கொடுத்துள்ளார்.  

அதனைத்தொடர்ந்து அப்போதுதான் நேற்று முன்தினம் மாலை 50 ரூபாயை தவறவிட்டது ஆசிரியர் ராமலட்சுமிக்கு நினைவுக்கு வந்தது.  உடனே மாணவியை வகுப்பறையில் முன்னிறுத்தி பாராட்டிய ஆசிரியர், மற்ற வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளையும் அழைத்து சிறுமியின் நேர்மையை வெகுவாக பாராட்டியுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு தெரியவர உடனடியாக மாணவியை பாராட்டிய அவர் தனக்கு கொடுக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பொறுப்பை ஒரு நாள்  மாணவிக்கு வழங்க வழங்கி அவரை கௌரவப்படுத்தி உள்ளார். அத்துடன் சிறுமி தீப பிரபா போல் மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.