ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடமையாக்கியதற்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்து உள்ளது.

“மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக்கப்படும்” என்று கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

இதைத் தொடர்ந்து, “போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து” அதன் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக, அவசரச் சட்டம் ஒன்றையும் அப்போதைய தமிழக அரசு சட்டப்பேரவையில் பிறப்பித்தது. 

இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இல்லமானது, அரசுடைமையாக்கப்பட்டது. இதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 67.95 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியது.

இதனால், “ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தங்களின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி உள்ளது என்றும், எனவே அது தொடர்பான நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்றும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தமிழக அரசியலில் அதிரடி மாற்றமாக திமுக ஆட்சிக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் தீர்ப்பு வழுக்கிய நீதிமன்றம், “வேதா நிலையத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. 

அதன் படியே, வேதா இல்லத்தின் சாவி தீபக், தீபாவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது.

அதாவது, கடந்த நவம்பர் 24 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பை வழங்கினார். 

அப்போதே, இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், “வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் தவறுகள் நடந்துள்ளது என கூறியதுடன், தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை எனறும், தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாததால் நீதிமன்றத்தை நாடியதாக அதிமுக கூறுவதை ஏற்க முடியாது” என்றும், குறிப்பிட்டது. 

அத்துடன், “நடைமுறை தவறுகள் உள்ளதாலும், பொதுப் பயன்பாடு இல்லை என்றும் உரிமையாளர் விருப்பத்திற்கு முரணாக கையகப்படுத்தப்பட்டு உள்ளதாலும், தனி நீதிபதி உத்தரவில் தலையிட அவசியமில்லை” என கூறிய நீதிபதி, அதிமுகவின் மேல்முறையீட்டு மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இப்படியாக, சென்னை உயர் நீதிமன்றம் இந்த மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்த நிலையில், தற்போது அதிமுக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மேல்முறையீடு செய்து உள்ளது. 

இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இங்கேயும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால், ஜெயலலிதா இல்லமான வேதா நிலையம், அவரது உறவினரான தீபாவுக்கு சொந்தமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.