புதிதாக உருமாற்றமடைந்து பரவி வரும் கொரோனாவுக்கு 7 புதிய அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது வைரஸ் என்னும் பெருந்தொற்று நோய். இந்த கொரோனா வைரஸால் உலக அளவில் இதுவரை சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் தற்போது வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

முக்கியமாக, இதற்கு முந்தைய கொரோனா வைரஸால் வகையைக் காட்டிலும் தற்போது 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வேகமாகப் பரவும் தன்மை கொண்ட வைரஸாக உருமாறியிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது உலகத்திற்கு புதிய அச்சுறுத்தலாக உருமாறியிருக்கிறது, உலக நாடுகளை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு “VUI 202012/1” என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவும் முறையில் எந்த மாற்றமும் கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில், இருமல் அல்லது தும்மலின் போது வெளிப்படும் வைரஸ் துகள்களின் மூலமாகவே ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு இந்த வைரஸ் தொற்று அப்படியே பரவுகிறது. ஆனால், இப்படியான முறையில் பரவும் வேகமானது, இதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும், தற்போது அதிகமாக இருப்பதால் குறுகிய காலத்தில் அதிகம் பேரை தாக்கும் என்பதே இப்போதைக்கு உள்ள மிகப் பெரிய சவாலாக நம் முன் நிற்கிறது. 

குறிப்பாக, இங்கிலாந்து நாட்டின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் முந்தைய கொரோனா வைரஸ் வகையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும் வீதம் 1.1 ஆக இருந்தது. ஆனால், இது தற்போதைய உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 1.5 சதவீதம் முதல் 1.7 சதவீதம் வரை தொற்றைப் பரப்புவது என்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் அறிகுறிகளாகக் காய்ச்சல், வறட்டு இருமல், வாசனை மற்றும் சுவை இழத்தல் ஆகியவை கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டு வந்தன. ஆனால், தற்போது புதிதாக உருமாறி இருக்கும் புதிய வகை கொரோனா வைரசுக்கு மேலும் 7 புதிய அறிகுறிகள் இருப்பது ஆய்வில் புதிதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

அதன் படி,

- அதீத சோர்வு
- தலைவலி
- பசியின்மை
- வயிற்றுப்போக்கு
- மனக்குழப்பம்
- தசைவலி
- தோல் அரிப்பு

ஆகியவை இந்த 7 புதிய அறிகுறிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளன. எனினும், இந்த அறிகுறிகள் யாவும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என்றும், இங்கிலாந்தின் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், இந்தியாவில் இது வரை இந்த புதிதாக உருமாறி இருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்பது நம்பிக்கை சற்று ஆறுதலான விசமாக இருந்தாலும், கொரோனா கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்து நாம் இன்னும் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவது நாட்டிற்கு நலம் பயக்கும் என்கிறார்கள் இந்திய மருத்துவர்கள்.

அத்துடன், பிரிட்டனில் உருமாற்றமடைந்து பரவி வரும் கொரோனாவுக்கு 7 புதிய அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டனிலிருந்து வந்தவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வருமாறு தமிழக சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதன் படி, நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் தாமாக முன் வந்து, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண் 104 என்ற நம்பரை தொடர்பு கொள்ளலாம் என்றும், தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இங்கிலாந்திலிருந்து பரவும் புதிய வகை கொரோனா குறித்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி வரும் 28 ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.