திருவள்ளூரில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் தெரியவந்ததையடுத்து ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சத்தரை கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் நம்பிராஜன். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை என இரு குழந்தைகள் உள்ள நிலையில், சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் சந்திராவின் கணவருக்கு கூலிவேலையில் போதிய வருமானம் இல்லாததால் சந்திரா ஸ்ரீ பெருமந்தூர் பேரூராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் துப்புரவு பணி செய்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையை சந்திரா, தனது வீட்டுக்கு தெரியாமல் அவருடன் பணியாற்றும் ஜெயந்தி என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக மப்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ரகசிய தகவலை அடுத்து ஒரு மணிநேரத்தில் போலீசார் ஜெயந்தியிடம் இருந்த குழந்தையை மீட்டனர். திருவள்ளூர் குழந்தைகள் நலக்குழுமத்தில் வைத்து சந்திராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்றது தெரியவந்தது. போலீசார் சந்திரா மற்றும் ஜெயந்தியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வறுமையின் காரணமாக அல்லது பெண் குழந்தை என்ற காரணமாக குழந்தையை பெற்ற தாயே விற்கும் அவலநிலை சம்மீப காலத்தில் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள்  நல வாரியம், மற்றும் அரசாங்க உதவியுடன் இம்மாதிரி விற்கும் குழந்தைகளை போலீஸ் முன்னிலையில் கண்டுபிடித்து அக்குழந்தையை காப்பகத்தில் சேர்க்கப்படுகிறது. ஒரு கணவன் மனைவி ஒரு குழந்தையை பெற்றுகொள்வதற்கு முன்பு தம்மால் குழந்தையை பராமரிக்க முடியுமா இல்லை என்றால் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது. இதனால் குழந்தை பிறப்பினை தவிர்க்கலாம் மேலும் பல குழந்தைகள் பாதிக்கப்படாமல் தவிர்க்கலாம்.