இந்திய திரை உலகின் நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. முன்னதாக நடிகை தமன்னா தெலுங்கில் நடித்துள்ள குருதுண்டா சீதாக்களம் மற்றும் F3 ஆகிய படங்கள் விரைவில் வெளிவரவுள்ளன. தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

மேலும் தமன்னா நடிப்பில் பாலிவுட்டில் போலே சுடியான் மற்றும் பிளான் ஏ பிளான் பி ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் தமன்னா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் பப்ளி பவுன்சர். தமன்னாவுடன் இணைந்து சௌரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹல் வைத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்கார் இயக்கத்தில் உருவாகும் பப்ளி பவுன்சர் திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஹிந்தி ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்கிளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. பவுன்சர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகும் எமோஷனல் நகைச்சுவைத் திரைப்படமான பப்ளி பவுன்சர் திரைப்படத்திற்கு ஹிம்மான் தமிஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதுவரை உலகம் பார்த்திராத, கேட்டிராத பெண் பவுன்சர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு  கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளன படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.