“விவசாயத்தை பாதிக்கும் எந்த ஆலைக்கும் தமிழகத்தில் அனுமதியில்லை” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது. 

அதாவது, “காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், புதுக்கோட்டை ஆகிய மாவட்டத்திற்கு உட்பட்ட  அறந்தாங்கி, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இடம் பெறும் பகுதிகளாக” கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 

கடந்த கால ஆட்சியின் போது, தமிழகத்தில் விவசாயம் செழித்து வளரும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதாக கூறி, செழித்து வளர்ந்து நின்ற விவசாய நிலங்களை பெரும்பாலும் அழித்து, அந்த நிலத்தில் பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டி, அதிலிருந்து மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த திட்டத்திற்கு கடந்த கால அரசுகள் அனுமதி கொடுத்ததுடன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மற்றும் அப்பாவி பொது மக்களை போலீசாரை கொண்டே, அடித்து உதைத்து கடுமையாகவே சட்டப்படி தண்டித்து வந்தனர்.

இது தொடர்பான போராட்டங்கள் மிகப் பெரிய அளவில் வெடித்த நிலையில் தான், தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு தொடங்கப்பட்டு, அறிவிக்கப்பட்டது.

இந்த அமைப்புகள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாகவே, “குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்தில் துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, ஒருங்கிணைந்த எக்கு ஆலை உள்ளிட்ட ஆலைகள், மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் உள்ளடக்கிய இயற்கை வாயுக்களின் ஆய்வு போன்றவை  துவங்க முடியாது” என்று  சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகவே, தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் கை மாறிய நிலையில், இன்றைய தினம் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. 

அப்போது, “இந்த வேளாண் மண்டல விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அத்துடன், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக 11 துறைகளின் அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், “உணவு பாதுகாப்பிற்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், வேளாண் பாதுகாப்புக்கான கொள்கைகள், பாசனம் மற்றும் வெள்ள நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண்மை மற்றும் அவை சார்ந்த தொழிலகங்களை மேம்படுத்துதல்” உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

முக்கியமாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே, தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “முன்னோர் காலத்தில் இருந்தே வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாக காவிரி டெல்டா விளங்கி வருகிறது” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “காவிரி டெல்டா மிகவும் செழிப்பான பகுதி என்றும், மிகப் பெரிய வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி திகழ்கிறது என்றும், காவிரி நீரை பெற சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து போராடி வருகிறோம்” என்றும், அவர் பேசினார்.

மேலும், “வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றும், முதல்வர் கூறினார்.

குறிப்பாக, “விவசாயத்தை பாதிக்கும் எந்த ஆலைக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது” என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

“வளமான தமிழகத்தை உருவாக்க வேளாண்மையை பாதுகாக்க வேண்டும்” என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.