“எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாத ஒரே மாநிலம் தமிழ்நாடு” தான் என்று சட்டப் பேரவையில் அதிமுகவினரை, திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளுத்து வாங்கிய செய்திகள் வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிலையில், அது தொடர்பாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அதன் படி, இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

இதில், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை இன்று சட்டசபையில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில் தான், “தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது வரை குறிப்பிட்ட அந்த பகுதியில் எந்த ஒரு கட்டுமான பணியும் தொடங்கப்படவில்லை என்று, கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது, ஒரே ஒரு செங்கல்லை காட்டி, “அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இது தான்” என்று, உதயநிதி ஸ்டாலின் கூறியது அனைவரது கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இது, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசு உறுதியேற்றது. 

அதன் படியே, எய்ம்ஸ் தொடர்பான கோரிக்கையை முன் வைப்பதற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  நாளைய தினம் டெல்லி செல்கிறார். 

டெல்லியில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்து அவர் வலியுறுத்தவும் இருக்கிறார். 

இந்த நிலையில் தான், இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த விவாதம் எழுப்பப்பட்டது.

அதன் படி, சட்டசபையில் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாக நீங்கள் பேசுவதற்கு முற்றிலும் வெட்கப்பட வேண்டும்” என்று, பகிரங்கமாகப் பேசினார்.

“மருத்துவமனை வளாகத்திற்கு போர்டாவது வைத்து உள்ளீர்களா? என்ன தான் செய்தீர்கள்?” என்று, அதிமுக வினரை பார்த்து அமைச்சர் மா. சுப்பிரமணியன், சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, “பல மாநிலங்களில் எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு கட்டங்கள் அனைத்தும் கட்டப்பட்டு வருகின்றன என்றும், ஆனால் இந்த திட்டத்தைத் தமிழகத்தில் அறிவித்தது முதல் இது வரை எந்த ஒரு பணியும் நடைபெறாத மாநிலம் தமிழ்நாடு மட்டுமே இருக்கிறது” என்றும், தனது ஆதங்கத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். 

மேலும், “தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை” எடுக்கப்பட்டு வருவதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.