அமெரிக்க படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில், தலிபான்கள் ஒருவரை தொங்கவிட்டபடி பறந்து சென்றதை போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். அந்நாட்டில், கடந்த காலங்களில் தலிபான்களின் ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் 

பாதுகாப்பு கேள்விக்குறியானதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அது போன்ற செய்திகளே அந்நாட்டிலிருந்து அதிகம் வெளி வருகின்றன. 

அத்துடன், அந்த நாட்டில் சாலையில் செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் என அப்பாவி பொது மக்களை தலிபான்கள் சுட்டுத் கொல்லும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் முழுமையாகக் கைப்பற்றி உள்ள நிலையில், அந்த நாட்டில் இருந்து நேற்றைய தினமான 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேற இருந்தன. இதற்கான உத்தரவுகளையும் அமெரிக்கா பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் தான், அமெரிக்க படை ஆப்கானிஸ்தானை விட்டு விலகி உள்ள நிலையில், அவர்கள் அங்கு விட்டுச் சென்ற ஹெலிகாப்டர்கள், விமானங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், அமெரிக்க படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் தலிபான்கள், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரை அந்த ஹெலிகாப்டரில் கயிற்றைக் கட்டி தொங்கவிட்டபடி ரோந்து சென்று உள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் உலக மக்கள் யாவரும் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்து உள்ளனர்.

எனினும், “நாங்கள் முன்பு போல இல்லை, தற்போது முற்றிலுமாக மாறிவிட்டோம்” என்று, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது பேசினார்கள். “அப்படி, ஊடக உலகில் அப்படியெல்லம் பேசிவிட்டு, தற்போதைய சூழலில் தலிபான்கள் இதனை எப்படி செய்தார்கள்?” என்கிற கேள்வியும் அந்த வீடியோவை பார்க்கும் போது உலக மக்களிடையே எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் எல்லாம் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருகின்றன. அதில், பெரும்பாலான செய்திகள் தலிபான்கள் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த நபரை இப்படி தொங்கவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், உண்மையைக் கண்டறியும் (Fact Checking) ஊடக நிறுவனங்கள் சில, “தலிபான்கள் அப்படிச் செய்யவில்லை” என்று செய்திகளை வெளியிட்டு வருகிறது.

அதற்குப் பதிலாக, அந்நாட்டில் இருக்கும் கந்தஹார் மாகாணத்தின் ஆளுநர் மாளிகையில் தங்களது அமைப்பின் கொடியைக் கட்டி பறக்கவிடும் நோக்கில் ஹெலிகாப்டர் மூலம் மேலிருந்து தலிபான் வீரரை கீழே இறக்க முயன்றுள்ளதாகவும்” ஒரு புது செய்தியும் உலாவுகிறது. 

எனினும், “காற்று அதிகம் இருந்த காரணத்தினால், தலிபான்கள் கொடியைக் கட்டாமல் திரும்பியுள்ளனர்” என்றும், கூறப்படுகிறது. ஆனாலும், அமெரிக்க படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில், தலிபான்கள் ஒருவரை தொங்கவிட்டபடி பறந்து சென்றதை போன்ற வீடியோ ஒன்று வெளியாகி, உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.