“இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவலைத் தெரிவித்து உள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி, முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 

இதையடுத்து, கடந்த 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 2 பட்ஜெட்கள் மீதான விவாதம் நடந்தது.

இந்த விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.

அதன் தொடர்ச்சியாகவே, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் படி, இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. 

அதன் படி, அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை இன்று சட்டசபையில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது, இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து” என்று, குறிப்பிட்டார். 

“பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

“பொருளாதார நலனுக்கும், சிறு, குறு தொழிலுக்கும் ஆணி வேராக பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன என்றும், பொதுத்துறை நிறுவன சொத்துக்களைத் தனியார் மயமாக்குவதைக் கைவிடக்கோரி பிரதமருக்குக் கடிதம் எழுத உள்ளதாகவும்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

இதனிடையே, “தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி” தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

மேலும், “செப்டம்பர் மாதம் முதல் இதற்காக அரசு ஊழியர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் 110 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்” என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.