“பள்ளி மாணவியின் தாய்க்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டதால், சென்னை மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவைப் பிடிக்க, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 

இது தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை டெல்லியில் பதுங்கியிருந்த போது, அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக அவரது பெண் பக்தர் சுஷ்மிதாவும் அப்போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

சிவசங்கர் பாபா மீதான இந்த பாலியல் வழக்கில், முன்னாள் மாணவிகள் 18 பேர் தனித்தனியாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்த உள்ளதாகவும், நீதிமன்றத்தில் போலீசார் கூறினார். இவற்றுடன், சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

எனினும், சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி, மனுத் தாக்கல் செய்த நிலையில், அந்த ஜாமீன் மனுவில், “செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை” என்று, சிவசங்கர் பாபா அந்தர் பல்டி அடித்திருந்தார்.

குறிப்பாக, “ஆன்மிகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்குத் தான் சென்று வந்ததாகவும்” சிவசங்கர் பாபா, அந்த ஜாமீன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து, இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், அவரது ஜாமீன் மனுவும் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில், சமீபத்தில் கூட 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். இதில் 40 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இது வரை சிவசங்கர் பாபா, ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.

முக்கியமாக, “கடந்த 2011, 2012 2013 ஆம் ஆண்டுகளில் படித்த சுஷில்ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகளை, சிவசங்கர் பாபா வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தது” சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்து உள்ளதாகக் கூறப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, “ஆண்மை இல்லாத நான் எப்படி இது போன்று பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட்டிருக்க முடியும்?” என்றும், அவர் சிபிசிஐடி போலீசாரிடம் பதில் கேள்வி கேட்டதாகவும்” தகவல்கள் வெளியாகிக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மிக முக்கியமாக, சிவசங்கர் பாபா மீதான இந்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக விசாரணைக்கு வந்த போது, “சிவசங்கர் பாபாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும்” அதில் குறிப்பிடப்படு இருந்தது. இந்த நிலையில் தான், சிவசங்கர் பாபா மீண்டும் “நான் ஒரு ஆண்மையற்றவர்” என்று, கூறியிருக்கிறார்.

ஆனால், தற்போது “பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயாருக்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக” புகார் கிளம்பி உள்ளன. 

இந்த புகாரில், சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், சிவசங்கர் பாபா வழக்கு மேலும் மேலும் தொடர்ந்துகொண்டே செல்வது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.