தமிழக சட்டப் பேரவையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளியேறிய நிலையில், சட்டப் பேரவைக்கு வெளியே இபிஎஸ் - ஓபிஎஸ் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3 நாள் விவாதம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

விவாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே, “நேரமில்லா நேரத்தில் பேச வேண்டும்” என்று கூறி, எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். அனுமதி வழங்கபட்டதையடுத்து, “கோடநாடு விவகாரத்தில், தமிழக அரசு பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து வருவதாக” எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதனையடுத்து, அவருக்கு தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். இதனால், முதலமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசை கண்டிக்கும் விதமாக, அதிமுக உறுப்பினர்கள் அவை வாயில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். 

இதனால், சபாநாயகர் அப்பாவு அதிமுகவினரை வெளியேற்ற அதிரடியாக உத்தரவிட்டனர். இதனால், அவைக்காவலர்கள் கூறியதையடுத்து, அங்கிருந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறினார்கள். அதிமுக உறுப்பினர்களை தொடர்ந்து பாஜகவினரும், பாமகவினரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

அப்போது அவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கோடநாடு விவாரத்தை பொறுத்தவரை கடந்த காலங்களிலும் வழக்குகள் பதிவு செய்யபட்டது என்றும், தற்போது புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யவில்லை” என்றும், விளக்கம் அளித்தார்.  

“கடந்த ஆட்சியில் வழக்கு பதிவு செய்யபட்டது என்றும், ஆனால், தற்போது 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது' என்றும், என்றும் பழம்பெரும் பழமொழியை குறிப்பிட்டு பேசினார். 

மேலும், “கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் இல்லை என்றும், அதனால், அவர்கள் அச்சப்பட தேவையில்லை” என்றும், அவர் கூறினார்.

இதனையடுத்து, வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக” குறிப்பிட்டார். 

“எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி நடக்கிறது என்றும், கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள், பொய்யான வழக்குகளை கொண்டுவந்து அச்சுறுத்தும் நடவடிக்கைளை திமுக மேற்கொள்கிறது” என்றும், குற்றம்சாட்டினார். 

“நீதிமன்ற விசாரணையின்போது, சயன் எந்தக் கருத்தையும் கூறாத போது, தற்போது திடீரென அவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படுவது ஏன்?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

“கடைசி நேரத்தில் என்னையும் கட்சி பொறுப்பாளர்களையும் வழக்கில் சேர்க்க சதி நடக்கிறது என்றும், விசாரணை முடிவடையும் நிலையில் இருக்கும்போது அதனை மீண்டும் விசாரிப்பது திமுக அரசுதான்” என்றும், அவர் குற்றம்சாட்டினார். 

குறிப்பாக, “அதிமுக தலைவர்கள் மீது திமுக வீண் பழி சுமத்துகிறது என்றும், ஆனாலும் தடைகளை தாண்டி அதிமுக வெற்றிநடை போடும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.