“மக்கள் சந்தோஷமாதான் இருக்காங்க, நம்முடைய செல்லூர் ராஜு தான் சந்தோஷமா இல்லைனு நினைக்கேன்” என்று, அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டப்பேரவையில் பேசியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அப்போது, இந்த கேள்வி நேரத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எழுந்து, “தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பேருந்துகளில் தான் பெண்களுக்கு இலவசம் என்கின்றனர். அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், அது பற்றி அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று, மதுரை எம்.எல்.ஏ. செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். 

இதற்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளிக்கையில், “மகளிருக்காக இலவச பேருந்து வசதி என்பது முதலமைச்சரின் கனவுத்திட்டம்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “சாதாரண கட்டண நகர்ப்புற பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாகப் பயணிக்க முடியும் என்றும், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தால், போக்குவரத்துக் கழகத்தை எவ்வாறு நடத்துவது” என்றும், கேள்வி எழுப்பினார்.

மேலும், “போக்குவரத்துத்துறை ஏற்கனவே 48,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்றும், தமிழ்நாடு முழுவதும் 14,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது அதிகரிக்கப்பட்டு 18,119 பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது” அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, “தமிழ்நாட்டில் மக்கள் சந்தோஷமாதான் இருக்காங்க, நம்முடைய ராஜுதான் சந்தோஷமா இல்லைனு நினைக்கேன்” என்று, அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிவிட்டு, அவரே சிரித்து விட்டார். அதனைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் இருந்த அனைவரும் இதனை கேட்டு சிரித்து விட்டனர். இதனால், சட்டசபையில் சிறிது நேரம் பெரும் சிரிப்பலை எழுந்தது.

இப்படியாக பெரு மகிழ்ச்சியோடு பேச்சைத் தொடங்கிய செல்லூர் ராஜுவை, அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆஃப் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, கேள்வி எழுப்பிய மதுரவாயல் எம்எல்ஏ கணபதி, “மதுரவாயல் 143 வது வார்டு நொளம்பூர் பகுதியில் சிற்றுந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று, கேள்வி எழுப்பி இருந்தார். 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “அங்கு ஏற்கனவே 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்றும், புதிதாக பேருந்து கேட்பதால், சூழலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், பதில் அளித்தார்.

பின்னர், “பெரம்பலூர் தொகுதி தேனூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைத்துத்தர வேண்டும்” என்று, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு, “தினசரி சிகிச்சைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை 40 க்கு மேல் இருப்பின், அங்கு கால்நடை மருத்துவமனை அமைத்துத் தரப்படும்” என்றும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.

அதே போல், “ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, பச்சமலை உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே அதிமுக அரசு செயல்படுத்திய சந்தன மரம் வளர்க்கும் திட்டம் தொடரப்படுமா? தேக்கு மரம் வளர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா?” என்று, திண்டுக்கல் எம்எல்ஏ சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “23.96 சதவீதம் உள்ள வனப்பரப்பை 33 சதவீதமான வனப்பரப்பாக உயர்த்துவதற்காக, 2030 ஆம் ஆண்டிற்குள் 261 கோடி மரங்கள் நட்டு பசுமை தமிழகமாக மாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்று, பதில் அளித்தார்.