ஜல்லிக்கட்டு புரட்சியில் உருவாகி கடந்த 4 ஆண்டுகளாக,  இளைஞர் அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்நாடு இளைஞர் கட்சி, மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது.

“தமிழ்நாடு இளைஞர் கட்சி” அறிமுகமானது அறிமுகமே இல்லாத மக்களின் மீது உண்மையிலேயே மாறா பற்றுக்கொண்ட இளைஞர் கூட்டம் ஒன்றாக சேர்ந்து உதயமான ஒரு கட்சி. ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினால் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி முதன் முறையாக 2017 ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டது.

தமிழத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு அனைத்து முக்கிய நகரங்களிலும் போராட்டம் நடத்தினர். இதன் முக்கிய அம்சமாக சென்னை மெரினாவில் அமைதியாக நடந்த போராட்டம், உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது. இதையடுத்து, இந்தப் போராட்டத்தில் குதித்தவர்கள் தமிழ்நாடு இளைஞர் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினர்.

இந்தக் கட்சியில் சேருமாறு, சமூக வலைதளங்களில் விண்ணப்பங்களை அனுப்பினர். பலரும் உறுப்பினர்களாக சேர்ந்து வந்தனர். அமைதியாக இவர்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டத்தின் விளைவாக 4 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டே ஒரே கட்சியாக அது மாறிப்போனது. 

இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அந்த தொகுதிக்குள் நன்கு அறிமுகமான காமேஷ் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் களம் இறங்கினார். 

அதே போல், நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி போட்டியிட்டது.
 ஜல்லிக்கட்டு போராளிகள் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளை தமிழக அரசே திரும்ப பெற செய்ய இவர்கள் எடுத்த முயற்சி பலரால் பாராட்டுப் பெற்றன. 

இந்நிலையில், இளைஞர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இந்த கட்சி, தற்போது மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

இதில், முதல்கட்ட பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில், கூட்டணியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 10 முதல் 15 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக தகவல் வெளியாகியுள்ளன. அத்துடன், நாளைக்குள் இந்த தொகுதி உடன்பாடு உறுதியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.