கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகளை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனாவின் 2 வது அலை தமிழகம் உட்பட நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கிய நிலையில், தற்போது அதன் தாக்கம் சற்று குறையத் தொடங்கியிருக்கிறது. 

தமிழகத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொது மக்கள் வெளியே சென்று வர அனுமதி வழங்கப்பட்டது. 

மேலும், பொது மக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தடுக்கும் விதமாகக் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் வாகனங்கள் மூலம் வீடுகளுக்குச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

முழு ஊரடங்கின் பிரதிபலனாகத் தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பின் எண்ணிக்கைகள் காட்டுகின்றன. 

அதே நேரத்தில், தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதியுடன் தளர்வுகளற்ற ஊரடங்கு நிறைவடையும் நிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று குறைந்துள்ள சில மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும், புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதாவது, வரும் 7 ஆம் தேதியுடன் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நிறைவடைய உள்ளதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்றைய தினம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, தடுப்பூசி செலுத்தும் பணி, காய்ச்சல் முகாம்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், “வரும் 7 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்படலாம்” என்றும், தற்போது தகவல் வெளியாகி உள்ளன. 

அதன்படி, “அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் சில குறிப்பிட்ட நேரம் மட்டும் இயங்க அனுமதி” அளிக்கப்படலாம் என்றும், கூறப்படுகிறது.

அதே நேரத்தில், “கொரோனா வைரஸ் தொற்று அதிகம் காணப்படும் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இதே கட்டுப்பாடுகள், அப்படியே தொடரும்” என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போதைய நிலவரப்படி, தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில், கோவை மாவட்டம் சென்னை மாவட்டத்தைக் காட்டிலும் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. 

மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. 

இதனால், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு?” என்று, இணையத்தில் தேடித் தேடி பார்க்கின்றனர்.

குறிப்பாக, “கொரோனா 3 ஆம் அலை பாதிப்பு வரும் பட்சத்தில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும்” தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.