தமிழ் திரையுலக ரசிகர்கள் தல என செல்லமாக அழைக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் அஜித் குமார் கதாநாயகனாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளை தொட உள்ளார். ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன் என தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் இயக்குனர் S.J.சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த வாலி திரைப்படத்தின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து முகவரி,  சிட்டிசன், வில்லன், வரலாறு என  சிறந்த நடிகராகவும் திகழ்ந்தார். 

அமர்க்களம், தீனா, அட்டகாசம், பில்லா, மங்காத்தா என  மாஸ் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உயர்ந்தார்.கடைசியாக சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று, திரைப்படங்களை இயக்கிய H.வினோத் இயக்கத்தில் பிரபல பாலிவுட் திரைப்படமான பின்க் திரைப்படத்தின் ரீமேக்கான  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். மீண்டும் இயக்குனர் H.வினோத் உடன் இணைந்துள்ள நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

வலிமை திரைப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது ஒரு சுவாரசியமான அப்டேட் வெளிவந்துள்ளது. வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சங்கீதா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசியபோது, “இதுவரை எந்த திரைப்படத்திலும் பண்ணாத விஷயங்களை வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் செய்திருக்கிறார்” என்றும்  “உடல் எடையை குறைத்து 10 வயது பின்னோக்கி சென்றது  போல அழகான தோற்றத்தில் அஜித்குமார் தோன்றுகிறார்” என்றும் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் வினோத் இயக்கும் வலிமை திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். நடிகர் அஜீத் குமாருடன் இணைந்து ஹூமா குரேஷி மற்றும் பார்லி மானே நடிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நீரவ்ஷா வலிமை திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நீண்ட நாட்களாக வலிமை திரைப்படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் காத்திருந்தனர் தற்போது வெளியாகி உள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.