மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் காரை தாக்கிய நபரை, கட்சி நிர்வாகிகள் கண் மூடித்தனமாக தாக்கி காவல் துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அங்குள்ள காந்தி ரோடு பகுதியில் நடிகர் கமல் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப முயன்றார். அப்போது, அதே பகுதியைச் 
சேர்ந்த நடுத்தர வயதுகொண்ட ஒருவர், கமல்ஹாசனின் காரை காரை திடீரென்று வழி மறித்தார். 

இதனால், கார் அங்கு அப்படியே நிறுத்தப்பட்டன. இதையடுத்து, கமல்ஹாசனின் பவுன்சர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந், அதே நபர் மீண்டும் கமல்ஹாசனின் கார் மீது ஏறியதுடன், கமல்  அமர்ந்திருந்த முன்பக்க கண்ணாடியை திடீரென்று உடைத்துள்ளார். 

இதில். அந்த காரின் கண்ணாடி அப்படியே சேதமடைந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பவுன்சர்கள் மீண்டும் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கி விட்டனர். இதில், கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த நடிகர் கமல்ஹாசன், தனது ஓட்டல் அறைக்கு கிளம்பிச் சென்று விட்டார். 

இதனை பார்த்த அங்கு கூடியிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அந்த நபரை கடுமையாகத் தாக்கி உள்ளனர். அத்துடன், அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

போலீசார் வருவதற்குள் அந்த நபரை தாக்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சரமாரியாகத் தாக்கி உள்ளனர். இதில், அவர் முகத்தில் ரத்தம் வழிந்துகொண்டு இருந்தது. அந்த நேரம் பார்த்து வந்த போலீசார், அந்த நபரை மீட்டு சென்றனர். அப்போது. மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூட்டமாக போலீசாரின் பின் வந்துகொண்டே இருந்தனர்.

இதனையடுத்து, அவர்களைச் சத்தம் போட்டு கலைந்துபோகச் செய்த காவல் அதிகாரி, அந்த நபரை முதல் உதவி அளிக்கும் படி, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு  அழைத்துக்கொண்டு போக சொன்னார். இதனையடுத்து, இரு காவலர்கள் அவரை தங்களது இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், வாணியம்பாடி அருகே திமுக கொடி கம்பத்திற்கு தீ வைத்து எரித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் ஊராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகள், கொடி கம்பங்கள் ஆகியன தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றி துணியால் சுற்றப்பட்டுள்ளன. இப்படி, துணியால் சுற்றப்பட்டிருந்த திமுக கொடி கம்பத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தீ வைத்துள்ளார். 

இது தொடர்பாக அம்பலூர் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த லிதீஷ் குமார் குடி போதையில் கொடி கம்பத்தை எரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.