“தமிழக முதலமைச்சருடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்” என்று, மு.க. ஸ்டாலின் நிபந்தனையுடன் அறிவித்து உள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தார்.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக, சேலம் மாவட்டம் வாழப்படியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தேர்தல் பரப்புரையின் போது பேசிய முதலமைச்சர், “தமிழக சட்டமன்ற தேர்தலானது, தர்மத்துக்கும் - அதர்மத்துக்கும் இடையிலான போராட்டம்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மை திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாகவும்” அவர் கூறினார்.

மேலும், “மு.க. ஸ்டாலினை போல நான் முதலமைச்சர் என்று சொன்னது கிடையாது என்றும், மக்கள் தான் முதலமைச்சர். மக்களின் ஆணையை செயல்படுத்துவது தான் முதல்வரின் பணி” என்றும், அவர் கூறினார். 

அத்துடன், “மு.க. ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார். கனவிலே மிதக்கலாம். ஆனால், நிஜத்தில் மிதக்க முடியாது என்றும், அதிமுக அரசின் மீது குற்றச்சாட்டு வைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” என்றும், வெளிப்படையாகவே சவால் விடுத்தார். இது தமிழக அரசியலில் பேசும் பொருளானது.

இந்நிலையில், இதற்குப் பதில் அளிக்கும் விதமாகக் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக முதலமைச்சருடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்” என்று, தெரிவித்து உள்ளார்.

அதாவது, இந்தியா டுடே தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் ராகுல் கன்வால் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசின் தயவோடு ஆட்சியைத் தக்க வைத்த அதிமுகவின் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயலும் பாஜகவின் எண்ணம் ஈடேறாது” என்று குறிப்பிட்டு பேசினார்.

அத்துடன், “விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும்” என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

குறிப்பாக, “உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கிற்கான உச்ச நீதிமன்ற தடையை விலக்கி கொண்டால், முதலமைச்சருடன் நான் எங்கு வேண்டுமானாலும் விவாதத்திற்கு வர தயார்” என்றும், பகிரங்கமாகவே அறிவித்து உள்ளார்.