தமிழகத்தில் நடைபெற்ற ஜெயராஜ் - பென்னிக்ஸ் லாக்கப் டெத் விவகாரத்தில், சினிமா பிரபலங்களின் முதல் விளையாட்டு வீரர்கள் வரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களைக் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். 

இதனையடுத்து, அன்று இரவே பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மறுநாள் காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள், ஊர் மக்கள் அனைவரும், சாத்தான் குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் நேற்று வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமை படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த செய்தி, காட்டுத் தீ போல் உலகம் முழுவதும் பரவியது. இதனால், கொந்தளித்த பிரபலங்கள் தங்களது கண்டனத்தைக் கடுமையாகப் பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி, “சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளான தந்தை மகனுக்கு நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்” என்று, இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

அவரைப் போலவே, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் "Justice For Jeyaraj And Fenix" என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். 

அதன்படி, இசையமைப்பாளர் டி.இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “தந்தை - மகன் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களைக் கேட்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது. முழுக்க, முழுக்க மனிதத் தன்மையற்ற ஏற்றுக் கொள்ளவே முடியாத தாக்குதல், அவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த இரக்க மற்ற நடைமுறைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர், இந்தியாவின் ஜார்ஜ் ஃபிளாய்ட்” என அவருடைய டிவிட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடி பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி, “சட்டத்திற்கு உட்படாதவர்கள் யாருமில்லை. இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்'” என்று, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து "Justice For Jeyaraj And Fenix" என்கிற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் பா. ரஞ்சித், '“பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தப் பட்டிருக்கும் சாத்தான் குளம் தந்தை - மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படு கொலைக்குக் காரணமான காவலர்களைக் காப்பதற்குத் துணியும் தமிழக அரசே, நீங்கள் தான் மக்களின் அரசா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “சாத்தான்குளத்தில் நடந்தது கொடூரமானது. மனித நேயத்தை அவமதிக்கும் செயல். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த ஏழை ஆத்மாக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில மனிதர்கள் வைரஸ்களை விட ஆபத்தானவர்கள்'' என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டன குரலைப் பதிவு செய்துள்ளார். 

நடிகை ஹன்சிகா, “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீதான மிருகத் தனம் மிக்க செயலை கேட்டு, அதிர்ந்து போனேன். குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கிணங்க நீதி கிடைக்க வேண்டும்” என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வன்மையாகத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பூ, “எந்தவித தாமதமும் இன்றி, ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்குச் சட்டத்தின் அடிப்படையில் நீதி கிடைப்பதை நாம் காண முடியுமா? குற்றவாளிகள் தப்பி விடக் கூடாது. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே'” என்றும் காட்டமாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து யுத்தம் நடத்தி உள்ளார்.

நடிகை வரலக்ஷமி சரத்குமார், சாத்தான்குளம் சம்பவத்தில் 2 காவலர்களும் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “சாத்தான்குளம் சம்பவம் மனிதாபிமானமற்ற செயல்” என்று தனது கண்டன குரலைப் பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் சாந்தணு, “ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு நடந்தது அநீதி என்றால், தூத்துக்குடியில் இன்றைக்கு நம்ம ஆளு ஒருத்தருக்கும் இதே நடந்திருக்கிறது” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் கவுதம் கார்த்திக், “நீதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட விரும்பும் நேர்மையான எந்த காவல் துறையினருக்கும் உரியச் செயல் இது அல்ல. காவலர் சீருடையில் இருக்கும் காட்டு மிராண்டித்தனம் மற்றும் வக்கிர எண்ணம் கொண்ட சிலருடைய வேலை தான் இது” என்று, தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கண்ட குரலைப் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே, “லாக் அப் மரணத்தில் தமிழகம் 2 ஆவது இடத்தில் இருப்பதா” திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளதற்குப் பதில் அளித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ, “லாக் அப் மரணம் நிகழ்ந்தால், தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறது” என்று கூறியுள்ளார்.