“பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு என்று நன்மதிப்பு உள்ளது அதனைக் கெடுக்கும் வேலையில் யாரும் ஈடுபட வேண்டாம்” என்று ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி  முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களைக் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, அன்று இரவே பென்னிக்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்தார். மறுநாள் காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்தார். 

இந்த விவகாரத்தில், ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரும் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தொடர்ந்து வெளியானது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. இதனால், ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது பல்வேறு கேள்விகளும், ஐயங்களும் எழுந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், “சாத்தான்குளம் சம்பவத்தை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உடன் சம்பந்தப்படுத்தி வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த 25 ஆண்டுகளாக சமூகப் பணியாற்றி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எந்த ஒரு குற்ற செயல்களிலும் இதுவரை ஈடுபட்டது இல்லை” என்றும், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கூறியுள்ளது.

“பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் வாலண்டியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும், அதனால் அவர்கள் எந்த குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இல்லை” என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் யாரும் இல்லை என்றும், கொரோனா தன்னார்வளர்களாக பலர் எங்கள் அமைப்பு சார்பாக களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளது.

குறிப்பாக, “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு என்று நன்மதிப்பு உள்ளது என்றும், அதை கெடுக்கும் வேலையில் யாரும் தயவு செய்து ஈடுபட வேண்டாம்” என்றும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு, அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சமூக சேவை ஆற்றி வருகிறது என்றும், நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு என்றும், அனைத்து வகையான சித்திரவதைகளையும் கண்டிக்கிறோம்” என்றும், அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

அத்துடன், “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பற்றி வெளியாகும் தவறான செய்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம்” என்றும், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கியமாக, “தவறான பிரதிநிதித்துவம் மற்றும் எந்தவொரு அரசியல் தொடர்பும் உள்ள எவரையும் இந்த அமைப்பில் சேருவதை முற்றிலுமாக தடை செய்கிறோம் என்றும், நடத்தை விதிமுறை வெளிப்படையாக கண்காணிக்கப்படுகிறது” என்றம், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “எங்கள் அமைப்பின் நியாயமான பெயரைக் கெடுக்கும் எவருக்கும் எதிராக, தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்றும், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது.

அதேபோல், இன்று செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐஜி முருகன், “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு காவல்துறை விசாரணையில் தலையிட உரிமை இல்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும், “காவல்துறை விசாரணையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தலையிட முடியாது என்றும், அவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்தார்.

அதேபோல், ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை தமிழக அரசு கலைக்க வேண்டும் என்று, எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், “ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது? யார், யாரை கொண்டு உருவாக்கப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றிய விபரங்கள் நாட்டு மக்களுக்கு தெரியவில்லை” என்றும் எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பி உள்ளார்.