தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் அதிக பட்சமாக 4,343 பேருக்கு கொரோனா உறுதி உறுதியாகி உள்ள நிலையில், இன்று மட்டும் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் இன்று வரை கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் தற்போது 6 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக 3,509, 3,645, 3,713, 3940, 3949, 3,943, 3882 என்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 3 ஆயிரத்து 500 க்கும் மேலாக அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் அதிக பட்சமாக 4,343 பேருக்கு கொரோனா உறுதி உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்திருந்த நிலையில், இன்று அதன் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்து உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

சென்னையில் இன்று மட்டும் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 62 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 964 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சென்னையில் தற்போது 22,686 பேர் கொரோனாவுக்க சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 38,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 57 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,264 லிருந்து 1,321 ஆக தற்போது அதிகரித்து உள்ளது. 

அதேபோல், கொரொனா வைரஸ் தொற்றில் இருந்து, இன்று 3,095 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 171 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,701 ஆக அதிகரித்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,139 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 990 ஆக அதிகரித்துள்ளது. 

மதுரையில் இன்று ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3,117 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பார்க்கும் போது..

சென்னை - 2,027
மதுரை - 273
செங்கல்பட்டு - 171
தி.மலை - 170
திருவள்ளூர் - 164
க.குறிச்சி - 139
வேலூர் - 138
ராணிப்பேட்டை - 127
ராமநாதபுரம் - 117
காஞ்சிபுரம் - 112
திண்டுக்கல் - 94
சேலம் - 88
விருதுநகர் - 76
தேனி - 65
சிவகங்கை - 63

என்ற அளவில் கொரோனா தொற்று பரவி உள்ளது.  

மேலும், தமிழகத்தில் இது வரை சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கு, கொரோனா வைரஸ் தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் திமுக . சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பாதிப்ப ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாகச் சட்டமன்ற உறுப்பினர்களான வசந்தம் கார்த்திகேயன், பழனி, ஆர்.டி. அரசு, மஸ்தான் ஆகியிருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன். எம்.எல்.ஏ சதன் பிரபாகரனின் மனைவி மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், நாளை ஒரு லட்சத்தைத் தாண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “'நாட்டிலேயே முதன்முறையாக அதிநவீன உபகரணங்கள், 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சென்னையில் உருவாக்கப்பட உள்ளதாக” தெரிவித்தார். 

“இதனால் பொது மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும்” என்றும்,  அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.