இந்த கோவிட் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவைப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக் கொண்ட உணவு பொருள் என்றாலே, அந்த உணவு அதிக கவனம் பெறுகிறது. அந்த வகையில் இப்போது , க்ரீன் டீ மற்றும் க்ரீன் காபி இடம் பெறுகிறது. 


க்ரீன் டீ மற்றும் க்ரீன் காபி எடைக்குறைப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் கூட அதிலிருக்கும் குளோரோஜெனிக் அமிலம் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும், இவை ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இன்சுலின் அளவுவை சீராக வைக்க உதவுகிறது. 


வறுக்காத பச்சை காபி கொட்டைகளிலிருந்து க்ரீன் காபி தயாரிக்கப்படுவதால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துகள் அப்படியே நமக்கு கிடைக்கிறது. க்ரீன் காபியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் உள்ளன. பிற காபிகளில் இருப்பது போலவே கஃபைன் க்ரீன் காபியிலும் இருக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக க்ரீன் காபியை குடித்தால் இன்சோம்னியா என்ற உறக்கமில்லாத நிலை ஏற்படும். இதுதவிர பதற்றம், அமைதியற்ற நிலை போன்றவற்றையும் ஏற்படுத்தும் . க்ரீன் காபி என்றில்லாமல் எந்த காபியாக இருந்தாலும் ஒருநாளைக்கு 150 - 200 மில்லி குடிக்கலாம். இரண்டு வேளைகள் மட்டும் அருந்தினால் போதும்.க்ரீன் காபி, க்ரீன் டீ இரண்டிலும் உடலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான விஷயங்கள் இருக்கிறது என்றாலும் கூட ஆன்டி கார்சினோஜெனிக் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை க்ரீன் டீயில்தான் அதிகம் உள்ளது. க்ரீன் டீயில் பக்கவிளைவுகளும் குறைவு. 

``டீ அல்லது காபி பேக்குகளின் உள்ளிருக்கும் டீத்தூள் அல்லது காபித்தூள் தரமானவையாக இருந்தாலும் , அந்த பேக் தயாரிக்கப்படும் பொருள்களில் பிளாஸ்டிக் சேர்க்கப்பட்டிருக்கும். டீ பேக்கின் ஆயுளை அதிகரிப்பதற்கான காலிக் அமிலம் என்ற ரசாயனமும் பாலிப்ரோபிலீன் என்ற பிளாஸ்டிக் என்ற பிளாஸ்டிக்கும் சேர்க்கப்பட்டே இருக்கும்.

இதனால் வெந்நீரில் டீ பேக்கை முக்கும்போது அந்த ரசாயனங்கள் இளகி, சூடான நீருடன் சேர்ந்து ரசாயனங்கள், பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுகள் டீயில் கலக்கும். தொடர்ந்து இதனை அருந்தும்போது உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து நாளமில்லா சுரப்பிகள் மண்டல பாதிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தீய விளைவுகளை ஏற்படுத்தலாம்.