சின்ன குழந்தைகளைப் போல் பிஸ்கட்டை நீரில் ஊறவைத்து காகம் ஒன்று உண்ணும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக வருகிறது.

“காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளிகள் வருவர்” என்பது, தமிழரின் மறபாக உள்ளது.

“பகிர்ந்து உண்ணும் கலையை காகங்கள் தான் மனிதர்களுக்கே உணர்த்துகின்றன” என்று, இலக்கியங்களில் கூட நாம் படித்தது உண்டு. அதனால் தான், காகம் பறவைகளில் கூடுதல் அறிவுத் திறன் பெற்றதாகக் கருதப்படுகிறது.

அப்படி, காகம் பறவைகளில் கூடுதல் அறிவுத் திறன் பெற்றதற்கு சான்றாக மேலும் ஒரு சம்பவம் தான் தமிழ்நாட்டில் தற்போது அரங்கேறி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர், தனது வீட்டின் மாடியில் காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைப்பது வழக்கம்.

அதற்கு காரணம், அவரது வீட்டிற்கு தினம்தோறும் காகம் ஒன்று வந்து செல்வதுண்டு. இதனைப் தினந்தோறும் பார்த்த ரவியின் குடும்பத்தினர், நாள் தோறும் வீட்டிற்கு வரும் காகத்திற்கு தண்ணீரும், பிஸ்கட்டும் வைத்து வந்துள்ளனர்.

அதன் படி, வீட்டிற்கு வந்த காகமானது, அங்கு வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டை எடுத்து குழந்தைகளைப் போல் நீரில் ஊற வைத்து உண்கிறது. 

இதனைப் பார்த்து பெரிதும் ஆச்சரியப்பட்ட அந்த குடும்பத்தினர், தினந்தோறும் வரும் காகத்திற்காக தண்ணீரும், பிஸ்கட்டும் வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். அத்துடன், காகம் பிஸ்கட்டை தண்ணீரில் ஊற வைத்து உண்பதை, அந்த பகுதி மக்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.

இதனால், தற்போது “காகம் குழந்தைகள் போல் தண்ணீரில் பிஸ்கட்டை ஊற வைத்து உண்ணும் வீடியோவானது, ராசிபுரம் பகுதியையும் தாண்டி தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

அதே போல், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, காகம் ஒன்று தனக்குக் கிடைத்த உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது காகத்தின் பக்கத்தில் ஒரு நாயும், பூனையும் நிற்பதை காகம் பார்த்து உள்ளது. 

உடனே, தன் வாயில் உணவினை எடுத்துச் சென்று முதலில் பூனைக்கு அந்த காகம் கொடுத்து உள்ளது. 

மீண்டும் உணவினை எடுத்துக்கொண்ட அந்த காகம், அந்த உணவினை தன் வாயால் எடுத்துக்கொண்டுபோய் அங்கு நின்றிருந்த நாய்க்கு ஊட்டி விட்டது.

குறிப்பாக, “தான் ஒரு வாய் சாப்பிட்ட காகம், மறுபடியும் பூனை, நாய்க்கு ஊட்டிவிடத் தொடங்கியது. இந்த வீடியோவும், அப்போது இணையத்தில் பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது.