இனி பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு புதிய விதிகளை விதித்து, “பாலியல் வன்முறையிலிருந்து பெண் குழந்தைகள் தன்னை தானே எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?” என்பது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் படித்து வரும் பெண் குழந்தைகள் தொடர்ச்சியாக, அந்த பள்ளியின் சக ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு 
ஆளாவதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில், அது தொடர்பான நடவடிக்கையைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான ஆசிரியர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இனி இது போன்று பள்ளி மாணவிகள் யாருக்கும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் படி,

- ஒரு மாத காலத்தில் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.

- ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர்கள், மாணவர்கள் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும்.

- மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும்.

- தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் இந்த குழுவில் நிச்சயம் இடம் பெறுவர்.

- பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் குழுவில் இடம் பெற்றிருப்பார்.

- புகார்களைப் பதிவு செய்ய மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு தனியாகப் பதிவேட்டை நாள்தோறும் பராமரிக்கும்.

- புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் புகார் பெட்டிகள் வைக்கப்படும்.

- வாய்மொழியாக உட்பட எந்த முறையில் புகார் பெறப்பட்டாலும், இந்த பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.

- குறைகளைத் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி புதிதாக உருவாக்கப்படும்.

- பள்ளி மாணவிகளிடம் இருந்து கிடைக்கப்பெறும் புகார்களை மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மாநில கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

- பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அமைப்பினரும் போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில், ஆண்டு தோறும் அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

- இது குறித்த விழிப்புணர்வு பள்ளிக் கல்வித்துறையால் உருவாக்கிச் செயல்படுத்தப்படும்.

- பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுய தணிக்கை செய்வதை உறுதி செய்யவும் பள்ளி கல்வி துறையால் உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.

- இணைய வழி கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு, அந்த பதிவுகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்ய வேண்டும்.

- அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் “நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம்“ என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.