“மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்கள், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவை பட்ஜெட்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

16 வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நேற்று முதல் தொடங்கி, நடைபெற்று வருகிறது. 

அப்போது, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மானாமதுரை திமுக எம்.எல்.ஏ. தமிழரசி, “விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று, கோரிக்கை விடுத்தார். 

அப்போது இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், அந்த சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்” என்று, குறிப்பிட்டார்.

“தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு உறுதியாக இருக்கிறது” என்றும், மு.க.ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்தார். 

“ஆனால், ஆளுநர் உரை மீதான விவாதம் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருப்பதால், அதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவது மரபாக இருக்காது என்றும்” அவர் அப்போது விளக்கம் அளித்தார்.

மேலும், “வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றும், அவர உறுதிப்படத் தெரிவித்தார்.

அத்துடன், “சிறுபான்மையின மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, “அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும்” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அப்போது பேசியது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, “பொதுபோக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும்” என்றும், அவர் அறிவுறுத்தினார்.