சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகப் பேசி வருவதாக ஜி.பி முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா உள்ளிட்டவர்கள் மீது காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிக்டாக்கில் செயலியில், தனது ஏரியா வட்டார மொழியில் பேசுவதும், அதுவும் எதிர் மறையான கருத்துக்களைக் கூறியுமே டிக்டாக்கில் பிரபலமடைந்தவர் ஜி.பி முத்து.

அதே போல், திருப்பூர் அய்யம்பாளையம் அடுத்த சபரி நகரைச் சேர்ந்த “சுப்புலட்சுமி” தான், டிக்டாக்கில் தன் பெயரை “சூர்யா” என்ற பெயரில் தொடர்ந்து அலப்பறைகள் செய்து சேட்டையான வீடியோக்களை வெளியிட்டு, அதன் மூலம் பிரபலமானார் ரவுடி பேபி சூர்யா. 

இவர்களைப் போலவே,  திருச்சி சாதனா, சிக்கா என்ற சிக்கந்தர் போன்றவர்களும், சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான கருத்துக்களைப் பேசி பரவலாக அறியப்பட்ட முகமாக மாறிப்போனார்கள்.

இந்த நிலையில் தான், டிக்டாக் புகழ் ஜி.பி. முத்து உள்ளிட்ட 4 பேர் மீது இமெயில் மூலமாக காவல் கண்காணிப்பாளருக்கு கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த முஹைதீன் இப்ராகிம் என்பவர் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்தார்.

காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி உள்ள அந்த புகார் மனுவில், “சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகப் பேசும் வீடியோக்கள் அதிக அளவில் வலம் வருகின்றன என்றும், தற்போது ஊரடங்கு காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் திறக்காத காரணத்தால் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் செலவிடும் சூழல்  ஏற்பட்டு உள்ளது” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

“இந்த சூழலைப் பயன்படுத்தி யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒன்றும் தெரியாத அப்பாவி மாணவர்களைத் திசை திருப்பி அவர்களை ஆபாச வலைத்தளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்கந்தர் போன்ற பலரும், மிகவும் ஆபாசமாக பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்” என்று, குற்றம்சாட்டி உள்ளார். 

அத்துடன், “இது போன்ற ஆபாச பேசும் அவர்களது வீடியோக்களை தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் பார்த்துப் பகிர்கின்றனர் என்றும், இவர்களின் உடல் பாவனைகளும், பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாகவும்” அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும், “சிறுவர், சிறுமிகளின் மனதைப் பாதிப்படையச் செய்யும் வகையில், இவர்களது ஆபாச பதிவுகள் வீடியோவில் இடம் பெறுகின்றன என்றும், இளைய சமுதாயத்தைப் பாதிக்கும் இத்தகைய வீடியோக்களையும், அதில் பேசுபவர்களையும் கண்டறிந்து தடை செய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் மத்தியில் நஞ்சைப் பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட இது போன்ற ஆபாச பேர்வழிகள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுத்து இது போன்ற பதிவுகள் மேலும் தொடராமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக போலீசார் தற்போது விசாரணையைத் தொடங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், டிக்டாக் பிரபலங்களான ஜி.பி. முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.