திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை தியாகராய நகரில் தனது பெற்றோரிடம் வசித்து வந்த 15 வயது சிறுமி, அந்த பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் படித்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 12 ஆம் தேதி முதல் அந்த 15 வயது சிறுமி காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் தோழிகள் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் சிறுமியை தேடிப் பார்த்து உள்ளனர். எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், பயந்துபோன சிறுமியின் பெற்றோர், அங்குள்ள அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி மாயமானது தொடர்பாக புகார் அளித்தார். 

அதன் பேரில், மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சென்னை கே கே நகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில், போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இந்த விசாரணையில், “அந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது” தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசாரிடம் அந்த இளைஞனை ஒப்படைத்தனர். இதனையடுத்து, அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இளைஞன் பாலகிருஷ்ணனை கைது செய்த காவல் துறையினர், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப் படி, அந்த இளைஞனை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்த 34 வயதான மகாலட்சுமி என்ற திருமணமாகாத பெண் தனது பெற்றோர்களுடன் வசித்து நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 49 வயதான வேல் பெருமாள் என்பவர் மகாலட்சுமிக்கு, கடந்த ஒரு வருடமாகவே பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் மகாலட்சுமி இரு முறை புகார் அளித்தார். புகாரின் பேரில் வேல் பெருமாளை முதலில் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். எனினும், அவரது பாலியல் தொல்லை தொடர்ந்து வந்தால், இது தொடர்பாக மகாலட்சுமி மீண்டும் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வேல் பெருமாளை கைது செய்த போலீசார், அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.